மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது.
வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் ஆறு ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.
வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது.
யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது.
மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன.
வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது.
வடக்கை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 25 வருடங்களின் பின் இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 213,907 மொத்த வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
முல்லைத்தீவில் 28,226 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 37,079 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தம் வசப்படுத்தியுள்ளது.
இதேவேளை வவுனியாவில் 41,225 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், மன்னாரில் 33,118 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கைப்பற்றியுள்ளது.
இதன்படி தமிழரசுக் கட்சி மொத்தமாக 28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்திற்கான இரண்டு போனஸ் ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கே கிடைக்கப்பெறும்.
எனவே வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் கைப்பற்றி தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
வடமாகாணம் சுமார் 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நேற்று (21) மாகாணசபைத் தேர்தலை எதிர் கொண்டது. வட மாகாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர்.
வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமது உரிமையை வென்றெடுப்பதற்கான ஆணையை வடக்கு மக்கள் இட்டுள்ளனர் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















