தமிழர் பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் அமைக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இராணுவத்தினால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பதற்கு , புதிதாக தெரிவாகியுள்ள வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனினும், இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டால், தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
















