முன்னால் போராளியின் வேண்டுகோள்! ஒன்றுபட வேன்டிய அவசியம்!!

armyநேர்மை, உண்மை, வீரம், தியாகம், திறமை இவை அனைத்தினதும் மொத்த வடிவம் தான் எமது தலைவர் மேதகு வே, பிரபாகரன் அவர்கள். எமது மக்களுக்காக தனது வாழ்வையே முழுமையாக அற்பணித்தவர்தான் எமது தலைவர்.
இன்று எமது தலைவரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு மேற்குறிப்பிட்டவைகளில் கடைசி மூன்றும் இல்லாவிடிலும் நேர்மை, உண்மை என்ற இரண்டுமாவது இருக்கிறதா?

எமது புனிதமான தலைவரைப் பற்றி பொய் சொல்லிக்கொண்டியிருக்கலாமா? உண்மையை மக்களுக்கு மறைப்பது சரியானதா? தலைவரின் கொள்கையை மட்டும் சொல்லிக்கொண்டு அதன் வழியில் செயல்படாது இருப்பவர்கள் விடுதலைப்புலிகள் ஆகிவிட முடியுமா?

எமது போராட்டத்தை வளர்க்கும் நோக்கோடு வெளிநாடுகளில் வாழும் எமது மக்கள், ஏணய வெளிநாடுகளில் வாழும் உலகத்தமிழர்கள், உலக மக்கள் அனைவரின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக தலைவரால் உருவாக்கப்பட்டதுதான் எமது வெளிநாட்டுக்கிளைகள். இவைகள் இன்று விடுதலைப் புலிகளின் தலைமையாகி விடமுடியாது. இவர்களுக்குரிய தகுதி கடந்த சில வருடங்களாக தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுக்கிளைகள் என்பது மட்டுமே. இவர்களுக்குரிய அதிகாரங்களும், செயல்பாடுகளும் அதற்கு உட்பட்டதேயாகும். இவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் நாம்தான் இப்போதைய தலைமை என சொல்லிக்கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது. அது எமது மக்களை ஏமாற்றுவதாகவே முடியும்.

கடந்த பல வருடங்களாக தலைவரின் கட்டளைக்கு இணங்க தமிழகத் தலைவர்களின் தொடர்புகளைப் பேணிவந்த இந்த வெளிநாட்டுக்கிளைகள், அந்த நம்பிக்கையைக் காரணமாக வைத்து அவர்களுக்கு மேலும் உண்மைகளை மறைத்து செயல்படுவது சரியானதா? உங்களை நம்பி இப்பொழுதும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் இவர்களை ஏமாற்றுவது சரிதானா?

இன்று எமது தலைமையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு குறைந்தபட்சம் நேர்மையான, உண்மையான தேசப்பற்றுள்ள, ஈழத்தில் வாழும் செயல்பாட்டாளர்களாலையே முடியும். இதை ஈழத்தில் உருவாக்குவதற்கு இந்த வெளிநாட்டுக் கிளைகளும், வெளிநாட்டில் வாழும் ஈழத்து மக்களும் முழுமையாகப் பாடுபடவேண்டும். இதுவே உண்மையான செயல்பாடாக இருக்கமுடியும்.

மேலும் இதற்கு அரசியல்துறைப்பொறுப்பாளர் திரு. நடேசன் போன்று இறுதிவரை போராடி இயக்கத்தின் கட்டளைப்படி சரணடைந்த பல போராளிகளும், தளபதிகளும் தளத்திலும், புலத்திலும் இருக்கிறார்கள். இவர்களும் தேசப்பற்றுள்ள மக்களும் சேர்ந்து, சோரம் போகாத ஒரு ஜனநாயகத் தலைமையை உருவாக்கவேண்டும். அரசியல், இராசதந்திரம் இரண்டையும் கையாளக் கூடிய தலைமையாக இது உருவாக்கப்பட வேண்டும். இதுவே இன்று எமது மக்களின் அவசரத்தேவையாகவும், கடமையாகவும் உள்ளது.

இன்று வெளிநாடுகளில் இதே கொள்கையில் இயங்கும் அனைவரும் பிரிந்து நின்று, மக்களையும் பிரித்து, எதிரிகளுக்கு உதவுவதை நிறுத்தி, மேலும்மேலும் எமது ஈழ மக்களுக்கு துன்பங்களைப் பரிசாக அளிக்காது, அனைவரும் ஒன்று சேர்ந்து தற்காலிகமான ஒரு வெளிநாட்டுக்கான கூட்டுத் தலைமைக்கிளைகளை உருவாக்கவேண்டும். இது ஈழத்தில் ஒரு சரியான தலைமை உருவாகும் வரையுமே இவ் வடிவத்தில் செயல்படவேண்டும். உருவான பின்னர் இதன் கிளைகளாகச் செயல்படவேண்டும்.

எமது தலைவர் தீர்க்கதரிசனத்தோடு இயக்க வளர்சிக்காக வருமானம் தரும் மூலங்களை வெளிநாடுகளில் நிறுவியிருந்தார். எமது புனிதமான தலைவரின் கொள்கைக்கு அமைய இந்த வருமான மூலங்களை ஒருங்கிணைத்து வழி நடாத்துவதற்கு தற்காலிகமான ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, கணக்காய்வுகள் சரியாகச் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இதைத் தனி மனிதர்களும், ஒரு குழுவினரும் அனுபவிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இது தாமதமின்றி செய்யப்படவேண்டும். இந்தப் புனிதக்கடமை புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் கைகளில் தான் உள்ளது. ஒரு முகமாக அனைவரும் ஒன்று சேர்ந்து முள்ளிவாய்க்காலுக்குப் பின் பிரிந்து நின்று செயல்படும் அனைத்துப் பிரிவினரையும் ஒன்று சேர்த்து, அதில் உள்ள நேர்மையான உண்மையான செயல்பாட்டாளர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும்.

இதற்கு மறுத்து நிற்ப்பவர்களை அனைவரும் ஒன்று சேர்ந்து நிராகரித்து விடவேண்டும். இது புலம்பெயர் வாழ்மக்கள் அனைவரினதும் ஜனநாயகக் கடமையாகும். இதுவே எமது ஈழ மக்களின் விடிவுக்கு சரியான வழியாக இருக்கும். இது எமது புனிதமான தலைவருக்கும், எமது மாவீரர்களுக்கும், இறுதிவரை பல துன்பங்களையும் அனுபவித்து, பல தியாகங்களையும் செய்த எமது மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான கடமையாகும்.

Tags: ,

Leave a Reply