”13” ஆதரவுத் தீர்மானங்களால் அதிகாரங்கள் கிடைத்துவிடாது; வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை என்கிறது அரசு

13-low“மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டா. 13ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது” என்று அரசு நேற்று அறிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு இனி மேல்சாத்தியம் இல்லை என்றும் அது தெரிவித்தது.
காணி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புகள், 18ஆவது திருத்தம் ஆகியவற்றைக் கோடிகாட்டி கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்ததை பலப்படுத்த தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், இது விடயத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்­னயாப்பா, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று ஊடவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம். இந்த அதிகாரங்கள் குறித்து இனி பிரச்சினை ஏற்படாது.

காணி அதிகாரம் குறித்து உயர் நீதி மன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அதனால் காணி அதிகாரம் குறித்து பிரச்சினை ஏற்படாது. அடுத்ததாக பொலிஸ் அதிகாரமானது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குக் கீழ்த் தான் இருக்கவேண்டும் என 18ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் பிரச்சினை ஏற்படாது.

இதேபோல், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் பிரச்சினை ஏற்படாது. இது விடயம் தொடர்பில் 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய அதை மேற்கொள்ள முடியாது” என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணசபை இணைப்பு முறை தவறானது என்று தானே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியுள்ளது என எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “வடக்கு, கிழக்கு என்பது ஆரம்பத்தில் ஒரே மாகாணசபையாகவும், ஓர் ஆளுநரின் ஆட்சியின் கீழும் இருந்தது.

ஆனால், தற்போது இவை இரண்டும் வெவ்வேறு மாகாணசபைகள். இரண்டு ஆளுநர்கள் இருக்கின்றனர். எனவே, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படாது” என்றார்.

Tags: , , ,

Leave a Reply