ஆதாரங்களை தகர்த்தாலும் விடுதலை வேட்கை அடங்காது; மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உறுதி

gajatheepanதமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்ட ஆதாரங்களைக் குண்டு வைத்து தகர்க்கலாம். ஆனால் எமது மக்கள் மனங்களிலுள்ள தமிழ் உணர்வையும் விடுதலை வேட்கையையும் எவராலும் அழிக்கமுடியாது – அடக்கி விடமுடியாது என்று தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சி இளைஞர் அணித் தலைவருமான பா.கஜதீபன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முல்லைத்தீவு இல்லம் இராணுவத்தால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டமையை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சுதந்திரத்துக்காக அன்று தொடக்கம் இன்றுவரை போராடிய அனைத்துத் தலைவர்களையும் மக்கள் தமது மனத்திலேயே ஆழமாகப் பதிய வைத்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அந்தத் தலைவர்களை மக்கள் மனங்களில் இருந்து அகற்றிவிட முடியும் என்பது அறிவீனமாகும். தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் அவர்களின் வாழ் விடங்களும் மதிக்கப்பட வேண்டியவை.

தமிழ் மக்களின் மனங்களில் தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம் என்ற உணர்வு உள்ளது. தம்மைத் தாமே ஆள விரும்பினார்கள். எமக்காகப் போராடிய எமது மண் மீட்புக்காக உயிர் நீத்தவர்களின் தியாகங்களை மக்கள் மனதில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்கள்.

அவர்களின் தேசியக் கனவை நனவாக்கவே தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரான எமக்கு மக்கள் வாக்களித்தார்கள். இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் வாழ்விடத்தை இராணுவம் இடித்தழித்தாலும் போராட்ட ஆதாரங்களை மறைத்தாலும் ஒவ்வொரு தமிழனின் மனத்திலும் போராட்டத் தியாகங்களும் உணர்வும் என்றும் நிலைத்துள்ளது.

எமது மக்களின் மனங்களிலுள்ள போராட்ட உணர்வையும் தியாகத்தையும் எவராலும் அழிக்க முடியாது – என்றுள்ளது.

Tags: , , ,

Leave a Reply