போருக்குப் பின்னரான மீள்குடியமர்வு இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் புதுக்குடியிருப்பின் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாமல் இருளிலேயே மூழ்கிக் கிடப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பரந்தன் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பையும் தாண்டி மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், இடையிலுள்ள சில பகுதிகள் இருளிலேயே மூழ்கிக் கிடப்பதாக மக்கள் முறையிடுகின்றனர்.
விசுவமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் இடையிடையே மின்மாற்றிகள் பொருத்தப்படவில்லை.
ஆரம்பத்தில் வடக்கின் வசந்தத் திட்டத்தின் கீழ் இந்தப் பிரதேசங்களின் வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டது. பின்னர் மின்மாற்றி பொருத்தாத காரணத்தால் மின்சாரம் வழங்கப்படவில்யென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக பரந்தன் – புதுக்குடியிருப்புப் பிரதான வீதியில் அமைந்துள்ள வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் மற்றும் கைவேலி கணேச வித்தியாலயம் ஆகியனவற்றுக்கு மின்மாற்றி பொருத்தாத காரணத்தால் மின்சாரம் வழங்கப்படவில்லை.
இந்தப் பாடசாலைகளில் கணினிகள் இருந்தும் அவை பயன்படுத்தப்படுவதில்லை.
பரந்தன் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவு வரையும் வீதியிலுள்ள மின்கம்பங்களில் கம்பிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் இங்கேயுள்ள வீடுகள் போன்று வீதிகளும் மின்சாரமின்றி இருளிலேயே மூழ்கிக் கிடப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கின் வசந்தம் மீளுமா அல்லது சாகுமா என ஒன்றுமே விளங்கவில்லையயனவும் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
















