மாகாணசபைகளில் பிளவுகளும், பிரதியமைச்சர் நியமனங்களும் அரசாங்கத்தின் உள் முரண்பாடுகளை காட்டுகின்றன – மனோ கணேசன்

mano-ganeshanமத்திய மாகாண சபையில் அரசு தரப்பு உறுப்பினர்கள் கட்சிமாறி வாக்களித்துள்ளனர். இதில் அரசின் அதிகாரப்பூர்வ மாகாணசபை தவிசாளராக போட்டியிட்டவர் தப்பி பிழைத்துள்ளார். வட மேல் மாகாண சபையில் அரசு தரப்பு உறுப்பினர்கள் கட்சிமாறி வாக்களித்துள்ளதால், அரசின் அதிகாரப்பூர்வ மாகாணசபை வேட்பாளர் தவிசாளராக தெரிவு செய்யப்படவில்லை. மாகாணங்களில் இப்படி என்றால் மத்திய அரசாங்கத்தில் அனைத்து அரசியல் பண்பாடுகளையும் தூக்கி வீசிவிட்டு வெறும் பதவிகளை காட்டி அரசாங்கத்தில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துகொள்ளும் கூத்து நடக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களே வெற்று அமைச்சர்களாக பொழுதுகளை கழித்துக்கொண்டு சும்மா இருக்கும்பொழுது, புதிய பிரதியமைச்சர் பதவிகளை வரிசையாக அரசு வழங்கி வருகிறது. இவை அனைத்தும் கோமாளிகளின் கூட்டமான இந்த அரசாங்கத்தின் உள்ளே இருக்கின்ற குடுமி பிடி சண்டைகளையும், பதவி வெறியாட்டத்தையும், ஒழுங்கின்மையையும் படம் பிடித்து காட்டுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வடமேல், மத்திய மாகாணசபைகளில் அரசாங்க கட்சி சபைத்தலைவர் பதவிகளுக்காக முன்மொழிந்த வேட்பாளர்களுக்கு எதிராக அரசாங்க உறுப்பினர்களே வாக்களித்ததையும், புதிய பிரதியமைச்சர் நியமனங்களையும் பற்றி கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் இந்த உள்வீட்டு உண்மைகள் இந்த பலவீனமான அரசாங்கம் நம் கண் முன்னால் விழுந்து நொறுங்கும் காலம் அண்மித்து வரும் செய்தியை சொல்லுகின்றன. உள்வீட்டு அரசியல் நெருக்கடிகளை இந்த நடப்புகள் படம் பிடித்து கட்டுகின்றன.

தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் பணப்புழக்க வீழ்ச்சி இந்நாடு எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியை அடையாளப்படுத்துகின்றது.

அதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐநா மனித உரிமை பேரவை கூட்ட தொடரில் பொறுப்பு கூறல் சவால்களை எதிர்நோக்க எந்தவித தயார் நிலையிலும் அரசாங்கம் இல்லை. கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளில் பிரதான சிபாரிசுகள் நிறைவேற்றப்படவில்லை. அவற்றை நிறைவேற்ற முடியாத சிங்கள தீவிரவாத சிறையில் இந்த அரசாங்கம் இருகின்றது. இந்த சிறை இந்த அரசாங்கமே உருவாக்கியதாகும். வடக்கு மாகாண தேர்தலை நான்கு வருடங்கள் தாமதித்து நடத்தி முடித்ததை, இன்று தனது ஒரே ஒரு சாதனை என்று இந்த அரசு உலகுக்கு காட்ட முயல்கின்றது. இது ஒரு சாதனை அல்ல. இதன் பின்னால் உள்ள உண்மை உலகத்துக்கு நன்கு தெரியும். இந்நிலையில் அடுத்த வருடம் முதல் காலாண்டில் பாரிய சர்வதேச நெருக்கடியை இந்த அரசாங்கம் எதிர்நோக்கும் சூழல் உருவாகி வருகின்றது.

Tags: , ,

Leave a Reply