ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த தேர்தலில் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார் என ராஜீவ் காந்தியை தாக்கிய முன்னாள் இலங்கைக் கடற்படைச் சிப்பாய் விஜித ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் பிரதமராவதற்கு ராகுல் காந்திக்கு சகல தகுதிகளும் இருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் இந்திய ஊடகமொன்று நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகள் விற்பனையாளராகவும் தொழில் புரிந்து வருகிறார்.
கொழும்புக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இரண்டு கணினிகளுக்கு முன் அமர்ந்து, சுற்றிலும் இசைத் தட்டுகள் அடுக்கப்பட்டுள்ள நிலையில் தாடியுடன் காணப்படும் அவரைப் பார்ப்பவர்கள் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவைத் தாக்க முற்பட்டார் என்பதை அறிந்தால் நம்பமாட்டார்கள். தற்போது 46 வயதான விஜிதரோஹண விஜிதமுனி, முன்னாள் கடற்படை சிப்பாய் ஆவார்.
1987ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை – இந்திய உடன்படிக்கையில் கையயழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார்.
அப்போது, கொழும்பில் அவருக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையில் அணி வகுத்து நின்றவர்களில் விஜேமுனி ராஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் தாக்கினார்.
இதனையடுத்து 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட விஜேமுனி, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி பின்னர் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடு தலையான பின்னர் தற்போது ஜோதிடராகவும், சிடி விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார்.
இவரது கடையில் புத்த மதப் பாடல்கள் தொகுப்பும், சிங்களப் படப் பாடல்கள் தொகுப்பும், சில ஹிந்திப் பட பாடல்களும் உள்ளன. ராஜீவைத் தாக்கிய சம்பவம் குறித்து அவரிடம் இந்தியப் பத்திரிகை ஒன்று பேட்டி கண்டது.
ஆனால், அதற்கு வாய் திறக்க மறுத்து விட்ட விஜேமுனி, ராஜபக்ச குறித்து மட்டும் ஊடகத்திற்கு ஜோதிடம் கூறச் சம்மதித்தார்.
“அடுத்த தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவுவார்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய அரசியலையும் தான் கவனித்து வருவதாகவும், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அவர் ஜோதிடம் தெரிவித்துள்ளார்.
ராகுல் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த விஜேமுனி, ராகுல் நிச்சயம் பிரதமராவார். ஆனால், இப்போதல்ல, இதற்கும் அடுத்த தேர்தலில் அது சாத்தியம் எனவும் தனது ஜோதிட திறமை மூலம் கணித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















