யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடமைப்பு அதிகார சபைக்குரிய காணியில் சிங்களக்குடும்பங்கள் தெற்கிலிருந்து திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டிருந்தனர். கடந்த 2010ஆம் ஆண்டில் இந்தக் குடியேற்றம் நடந்தது.
நேற்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்றிருந்த வீடமைப்பு அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் மக்களுக்கு திட்டமிட்டுக்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் அவர்கள் குடியேறியுள்ள காணிக்குரிய உறுதியை வழங்குவதற்காக காணிகளை அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுததியில் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என தம்மை அறிவித்துக் கொண்டு யாழ் புகையிரத நிலையில் வந்து தங்கிய பொழுது அவர்களை பார்வையிட மீள்குடியேற்ற அமைச்சர் அவ்விடத்திற்கு வருகை தந்தார். பின்னர் அந்த மக்கள் நாவற்குழியில் சென்று அத்துமீறிக் குடியேறிக் கொண்டார்கள்.
நேற்றைய தினம் சிங்கள மக்களுக்கு உறுதியினை வழங்குவதற்காக காணிகளை அளப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தொலைபேசி வழியாக அறிவித்தனர்.
கடந்த பல வருடங்களாக காணிகள் அற்ற நிலையில் புகiயிரத வழிகளில் வசிக்கும் மக்களுக்கும் காணி உறுதியற்ற மக்களுக்கும் இன்னமும் உறுதிகள் எதனையும் வழங்காத நிலையில் சிங்கள மக்களுக்கு அவசர அவசரமாக உறுதிகளை வழங்குவது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வந்த பொழுது வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகளை அங்கு காணக்கிடைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் காணிகளுக்குரிய ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என்று கேட்டபொழுது அவை யுத்தத்தில் அழிந்துவிட்டன என நாவற்குழியில் குடியேறிய தெற்கு மக்கள் தெரிவித்தனர்.
















