தமிழனை தமிழனே ஆளவேண்டும், அபிவிருத்திகளுக்கு அப்பால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனபவற்றை வலியுறுத்தியே மக்கள் மீண்டுமொரு முறை திரண்டு வந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தப்பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தின் கீழாக மாகாணசபை, இனப்ப பிரச்சனைக்கான அரசியல் தீர்வாக மாட்டாதென்பது அனைவருக்கும் புரியும். அத்தகைய மாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி, எதையாவது செய்யலாமாவென இப்போது நாம் பரீட்சித்துப்பார்க்க போகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடை.பெற்ற வட மாகாண சபையின் கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையி.லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள், கூட்டமைப்பிற்கு ஏகோபித்த ஆதரவை ஏன் வழங்கியிருக்கறார்கள். அனைவரதும் ஒற்றுமை, தமிழனை தமிழனே ஆளவேண்டும், அபிவிருத்திகளுக்கு அப்பால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனபவற்றை வலியுறுத்தியே மக்கள் மீண்டுமொரு முறை திரண்டு வந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கிறார்கள்.
வாக்குகளை அளிக்கும் போது அவர்கள் எங்களைப் பார்க்கவில்லை, கட்சிகளை பிரித்துப் பார்க்கவில்லை எந்தவித பாகுபாடும் மக்கள் மனங்களில் இருக்கவில்லை. அனைவரும் கூட்டடமைப்பையே வரவேற்றார்கள். அதிலும் முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்புவாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்புபாராட்ட அல்ல. இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையேயாகும். அதற்கு அப்பால் தனிப்பட்ட ரீதியினில் எவருமே போடப்பட்ட வாக்குகளுற்கு உரிமை கோர முடியாது.
1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தப்பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தின் கீழாக மாகாணசபை, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வாக மாட்டாதென்பது அனைவருக்கும் புரியும். எமது விடுதலைப் போராட்டத்தினில் அனைத்தையுமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்த, தமிமீழ விடுதலைபபுலிகள் மாகாண சபை முறைமையை நிராகரித்திருந்தது. அனைவருக்கும் தெரிந்ததே
அத்தகைய மாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி, எதையாவது செய்யலாமாவென இப்போது நாம் பரீட்சித்துப்பார்க்க போகின்றோம். அனைவரும் மதிக்கின்ற அமைச்சரவையொன்று இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களிற்கு துறைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டவை வெறுமனே காகிதத்தினில் இருக்காது எதையாவது செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.
யுத்தத்தின் கோர வடுக்களை தாங்கி நிற்கின்ற எமது மக்களது உணர்வுகளை அவர்களுள் ஒருத்தியாக நானும் நன்கு அறிவேன். அவர்களிற்கு வெறுமனே இயன்ற வலி நிவாரணங்களைமட்டும் நாம் வழங்கினால் போதாது.
எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக ,மூன்று குழந்தைகளதுதாயாக, காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத்தலைவியாக கேட்கின்றேன். நாம் ஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச்செல்வோம்
















