கிழக்கு மாகாணசபையின் நடப்பாண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும், அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களிலும், பாரபட்சமான முறைமையில் ஆளும் தரப்பு நடந்து கொண்டுள்ளது. அதனால் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவதுவடக்கு, கிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது தேர்தலின் பின் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு
ஒரு வருட பூர்த்தியை எட்டியுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் விரும்பியோ, விரும்பாமலோதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சியில் இருந்து செயல்பட்டு வருகின்றது. இந்தக் கால கட்டத்தில் மாகாண சபையின் சகல திணைகளங்களையும் சேர்ந்த உயர் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் தங்களது கடமைகளைச் சிறப்பான முறைமையில் நிறைவேற்றியமை பாராட்டுக்குரியது.
இத்தகைய சூழலில் ஒருசில அமைச்சுகளுக்கான நடப்பாண்டுக்கான நிதிஒதுக்கீடுகளிலும், அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களிலும் இன விகிதாசாரப் பரம்பலை கவனத்தில் கொள்ளாமல் முறை கேடான முறைமையில் ஆளும் தரப்பு நடந்து கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு 2013 ஆண்டு ஆயிரம் பாடசாலை திட்டத்துக்கென மொத்தம் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டன. அதில் அம்பாறை மாவட்டச் சிங்களப் பாடசாலைகளுக்கு 30 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு மாவட்டப் பாட சாலைகளுக்கு 5மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டப் பாடசாலைகளுக்கு 5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு திருகோணமலை மாவட்டத்துக்கு 69 மில்லியன் ரூபாவும், அம்பாறை மாவட்டத்துக்கு 99 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 52 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.
உள்ளூராட்சி அமைச்சு திருகோணமலை மாவட்டத்துக்கு 32மில்லியன் ரூபாவையும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 24 மில்லியன் ரூபாவையும், அம்பாறை மாவட்டத்துக்கு 31 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.
கிழக்கு மாகாணசபையின் பாராபட்சமான செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்தி நல்லாட் சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















