வடக்கு ஆளுநரை மாற்ற கூட்டமைப்பால் முடியாது; உறுதியாகத் தெரிவித்தது அரசு

tnalogo2வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிவில் அதிகாரியொருவரை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அரசு சாதக பதிலை வெளியிடவில்லை.

“வடக்கு ஆளுநரை நீக்குமாறு கூட்டமைப்பால் கோரிக்கையை மாத்திரமே விடுக்க முடியும். இது தொடர்பில் தீர்மானிக்கும் சக்தி அரசிடமே இருக்கின்றது. குறித்த கோரிக்கை முக்கிய விடயமல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பி. அஸ்வர், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கேள்வி நேரத்தின்போது, “வடமாகாண ஆளுநராகப் பதவி வகிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிவில் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு வடமாகாணசபை கன்னியமர்வில் உரையாற்றிய முதல்வர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளாரா?” என்று ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியதாவது:

வடக்கு ஆளுநர் இன்னமும் அப்பதவியில் இருக்கின்றார் தானே…? அப்படியானால் கூட்டமைப்பின் மேற்படி கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி பிரதிபலிப்பை வெளியிடவில்லை என்றுதானே அர்த்தம்…

கூட்டமைப்பால் கோரிக்கைகளை மாத்திரமே முன்வைக்க முடியும். அது தொடர்பில் செவிசாய்த்து தீர்மானம் எடுக்கும் சக்தி அரசுக்கே இருக்கின்றது. தம்மிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுள் நாட்டுக்கு முக்கியமானவை சம்பந்தமாக அரசு கவனம் செலுத்தும்.

அரசுக்கு முக்கியமில்லாத கோரிக்கைகளும் இருக்கின்றன. அந்த அடிப்படையில் கூட்டமைப்பின் கோரிக்கை தற்போதைய சூழ்நிலையில் முக்கியவிடயமல்ல.

குறிப்பாக வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுமாறு பலதரப்பும் கோரிக்கை விடுத்தன. இருப்பினும், அங்கிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்ற முடியாதென ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார். நாட்டிற்கு என்ன தேவையோ அதன்படிதான் அரசு முடிவெடுக்கும்” என்று கூறினார்.

Tags: , ,

Leave a Reply