இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நான் எழுதிய கடிதம் மனித உறவின் வெளிப்பாடே அன்றி வேறு எதுவுமில்லை. இதற்கும் பொதுநலவாய மாநாட்டுடன் முடிச்சுப் போட முடியாது எனவும் அவ்வாறு செய்தால் அதற்கு தான் பொறுப்புக்கூற முடியாது என வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிற் டெலியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தக்கடிதம் மனித உறவின் வெளிப்பாடே தவிர வேறு எதுவுமில்லை. கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இழுபறிநிலையிலிருந்த இந்தத் தேர்தலை நடத்த இந்தியாதான் அதிகம் நெருக்கடி கொடுத்தது என்பது எனது கருத்து.
இந்தியாவின் நெருக்குதலினால் இடம்பெற்ற தேர்தல் என்பதனால் நன்றிகளைத்தெரிவிப்பது மனித உறவின் வெளிப்பாடு என்ற காரணத்தினாலேயே கடிதம் அனுப்பினேன்.
அத்தோடு இலங்கைக்கு எப்போதாவது வரும்போது தான் யாழப்பாணத்திற்கும் வருமாறு கோரிக்கை விடுத்தேன் இதற்கும் பொதுநலவாய மாநாட்டுடன் முடிச்சுப் போட முடியாது எனவும் அவ்வாறு செய்தால் அதற்கு தான் பொறுப்புக்கூற முடியாது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
















