வளர்ச்சி அடைந்து வரும் உலகில் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ளதாக வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மாறியுள்ளன. இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இன்மை, பொருட்கள் சேவைகள் என்பவற்றின் விலையேற்றம் என்பன காரணமாக தமது குடும்பத்தையே கொண்டு நடத்த முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு மீள் பிறப்பை நிதி நிறுவனங்களும் வங்கிகளும் ஏற்படுத்துகின்றன என கூறப்பட்டாலும் அவை மக்கள் நலன்சார்ந்து தான் இயங்குகின்றனவா? என்ற சந்தேகமானது மக்களிடையே ஏற்படாமல் இல்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் பல புதிய தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தமது கிளைகளை விஸ்தரித்துள்ள போதும் இதன் மூலம் மக்கள் எவ்வளவு தூரம் நன்மை பெறுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே? இவை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடன்வழங்குதல், தங்க நகை அடைவு சேவை, சேமிப்பு செய்தல், வியாபாரத்திற்கான நடைமுறைக் கணக்கைச் செயற்படுத்துதல், லீசிங் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகின்றன.
இருப்பினும் வங்கிகளினது தங்க நகை அடைவுச் சேவை செயற்பாடுகளின் போது சில வங்கி கடைப்பிடிக்கும் கடும் போக்கு கொள்கைககளால் மக்கள் பாதிப்புறுகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
மக்கள் தமது அவசர பணத் தேவைகளுக்காக தம்முடம் உள்ள தங்க நகைகளை அடைவு வைத்து பணத்தினை பெற்றுக் கொள்ளும் செயற்பாடானது சாதாரணமாகிவிட்டது. தம்மிடம் உள்ள தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம், என பல நகைகளை அடைவு வைத்தவர்கள் மீட்க முடியாமல் போன சம்பவங்கள் நிறையவே உள்ளதனை நாளாந்தம் வங்கிகளால் அறிவிக்கப்படும் ஏலவிற்பனை தகவல்கள் வெளிப்பாடுத்துகின்றன.
இது தொடர்பில் வவுனியா நகரைச் சேர்ந்த கி.வசந்தன் கூறுகையில், நான் என்ர அவசர தேவைக்காக வவுனியா நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் ஆசை ஆசையாக செய்த மோதிரத்தை அடைவு வைத்து 38,000 ரூபாய் பணத்தினை வாங்கினான். ஒரு வருசம் முடிஞ்சதும் வங்கியால வட்டியை கட்டுமாறு அல்லது நகையை மீளப் பெறுமாறும் கடிதம் வந்தது. நான் வங்கிக்கு போய் வட்டியை கட்ட கேட்டபோது, தங்கத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் வட்டி மட்டும் கட்டேலாது முதலிலையும் அரைவாசியை கட்டனும் இப்ப 23,000 ரூபாய்க்கு தான் அடைவு வைக்கலாம் என கூறினார்கள். நான் வட்டியையும் கொஞ்ச முதலையும் கட்டுறன். பிறகு மிச்ச முதல கட்டுறன் எனக் கேட்டேன். அப்படி செய்யேலா என்று சொல்லீட்டார்கள். இப்ப என்ர நகையை ஏலத்தில வித்திட்டாங்க என்றார் கவலையுடன்.
வங்கிகள் தமது விளம்பரங்களில் பகுதிக் கொடுப்பனவு முறை, வட்டியை மட்டும் செலுத்தும் வசதி என பல தகவல்களை வழங்கி வாடிக்கையாளர்களை தம் வசப்படுத்த முயல்கின்ற போதும் அதனை நடைமுறைப்படுத்துகின்றனவா? என்பதனை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
அதிகரித்த வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு பிரச்சனை, பல் தேசிய கம்பனிகளின் வருகையால் உள்ளூர் வர்தக நடவடிக்கைகள் பாதிப்பு, விவசாய அழிவு போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்பார்ப்புகளுடன் வைத்த அடைவுகளை உடனடியாக மீட்கமுடியாமல் போகிறது என்கின்றனர் மக்கள். இவர்கள் பகுதி பகுதியாகவாவது வட்டியைச் செலுத்தி தமது நகைகளை காப்ப முயல்வது தவறா? இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நகைகளை போட முடியாதா? அவர்களுக்கு எதிர்காலம் இல்லையா? என்பதை வங்கிகளே தீர்மானிக்க வேண்டும்.
என்.கலையரசி இது தொடர்பில் கூறுகையில், என்ர மனுசன் வியாபாரம் செய்யுறதற்காக கொஞ்சம் கடன் எடுத்திருந்தம். அந்த காசு காணா என்றதால என்ர தாலிக் கொடியைக் கொண்டு சென்று வங்கியில அடைவு வைச்சன். அவர் உழைக்கிறது கடன் கட்டத்தான் காணும். அதால தாலிக் கொடியை எடுக்கல. தாலிக் கொடிக்கு காசு கட்டச் சொல்லி வங்கியால கடிதம் வந்தது. நான் போய் வட்டியை கட்ட கேட்டன். ஆனால் முதலில அரைவாசியையும் வட்டியையும் கட்டச் சொன்னார்கள். பல தடவை சென்று வட்டியை மட்டும் இப்ப கட்டுறன். முதலைப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுறன் என்று எமது நிலையைச் சொன்னேன். அவங்க தங்கட றுல்சை மீறி செய்யேலா என்று என்ர தாலியை வித்திட்டாங்க. இப்ப என்ர மனுசனோட நான் ஒரே சண்டை. உங்களால தான் தாலி வித்திடாங்க என்று. வீட்ட அம்மாவும் அவருக்கு ஒரே பேச்சு. குடும்பம் குழையுற நிலையில இருக்கு என்றார் கண்ணீருடன்.
மக்கள் நகையை அடைவு வைக்கும் போது பணப்பெறுமதி குறையும் என்று தெரிந்து அடைவு வைப்பதில்லை. அவசர தேவைக்காக வைத்தவர்கள் நகையின் விலை குறைந்தாலும் வட்டியைக் கட்டி பகுதி பகுதியாக பணம் செலுத்தி தமது நகையை மீளப்பெற முயல்வதை சில வங்கிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களுக்காகவா வங்கிகள் என எண்ணத் தோன்றுகின்றது? பணத்தை வைத்துக் கொண்டு வங்கிக்கு வட்டி கட்டி உழைப்பை கொடுக்க வேண்டும் என மக்கள் நினைப்பதில்லை. மாறாக முழுப் பணத்தையும் செலுத்த முடியாமல் இருக்கின்ற சந்தர்பங்களில் தான் வட்டியை மட்டும் அல்லது வட்டியின் பகுதியை கட்ட முனைகிறார்கள். அவ்வாறு தமது நகையை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என ஆதங்கத்தடன் மக்கள் நடக்கின்ற போதும் சில வங்கிகளின் செயற்பாடுகள் அதற்கு தடையாக அமைந்துள்ளது.
இதனால் இன்று பல குடும்பங்கள் தமது நகைகளை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பொன்னையும் மண்ணையும் சேர்த்தால் எந்தக் காலத்திலும் பயன்படும் என எமது முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் கஸ்டரப்பட்டு வியர்வை சிந்தி செய்த நகைகளை காப்பாற்ற முடியாமல் எத்தனை குடும்பங்கள் சண்டைகளுடனும் குழப்பங்களுடனுடம் வாழ்கிறார்கள் என்பதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஏன் கவனத்தில் கொள்ள வில்லை.
தமிழர் பண்பாட்டில் முக்கியமான தாலிக் கொடியைக் கூட சில வங்கிகளின் கடும் போக்கு சட்டதிட்டங்களால் இழந்து, அதனால் குடும்பச் சண்டை ஏற்பட்டு விவாகரத்துக்காக நீதிமன்றங்களின் வாசல்களில் கூட சில குடும்பங்கள் காத்திருக்கின்றன.
அடைவு வைத்த நகைகளுக்கு வட்டியை ஆவது செலுத்தி ஏல விற்பனையில் இருந்து தடுத்து தமது நகைகளை மீட்பம் என துடிக்கும் மக்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன? மக்ளை வளப்படுத்தவே வங்கிகள் என்ற நிலையை அவர்கள் கவனத்தில் கொண்டு செயற்படுமா என்பதே பலரது எதிர்பார்ப்பு.
















