அவுஸ்ரேலிய, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பு

aus-tnaஅவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று வவுனியா தம்பா விருந்தினர் விடுதியில் இன்று(08) காலை இடம்பெற்றது.

அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் இன்று வவுனியா வருகை தந்த அவர்கள் தற்போதைய அரசியல் நிலமைகள், போரின் போது மீறப்பட்டதாக கூறப்படும் மனித உரிமைமீறல்கள் தொடர்பாக கூட்டமைப்பினருடன் கலந்துரையாடினர்.

இது தொடர்பில் அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில், இலங்கை தொடர்பாக நாங்கள் அவதானித்து வருகின்றோம். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றோம். வட பகுதிக்கு வருகை தந்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து இங்குள்ள பிரச்சனைகள் தொடர்பாக அறிந்து கொண்டுள்ளோம். இதனை அறிக்கை வடிவில் எமது நாடாளுமன்றத்திலும் வெளிநாட்டு தூதுவர்களிடமும் வழங்கவுள்ளோம். பொது நலவாய மாநாட்டுக்கு எமது நாட்டில் இருந்து பிரதிநிதிகள் வரவுள்ளனர். நாம் வடபகுதி விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் தாய்நாடு திரும்பவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

aus-tna2

இச் சந்திப்பு தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் போருக்கு முன்னரும் பின்னரும் அரசு மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டனர். இது ஒரு கலந்துரையாடலாக இடம்பெற்றது. தொடர்ந்தும் இது தொடர்பில் அவர்களுடன் இனிவரும் காலங்களிலும் பேசவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில், மீன்பிடி போக்குவரத்து துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply