யுத்தம் முடிவடைந்து இன்று நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையமானது அகற்றப்படாது அதே இடத்தில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றது. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் இவ் நலன்புரி நிலையமானது, நலன்புரி நிலையங்களுக்குரிய எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் காணப்படுகின்றது. கொட்டும் மழையில் நனையும் கொட்டில்களுக்குள் முடங்கிய படி 155 குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பூந்தோட்டம் கம்பஸ் முகாம் (நலன்புரி நிலையம்) தற்போது எந்தவிதமான வசதிகளும் அற்றதாக குறிப்பாக அப்படி ஒரு முகாம் தற்போதும் இருக்கின்றதா? என மற்றவர்கள் கேட்கும்படியான நிலையில் இருக்கின்றது.
இம் முகாமில் இருந்த மக்களில் ஒரு தொகுதியினர் யுத்தம் முடிவடைந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றுள்ளதுடன், சொந்த காணியற்ற மக்களில் ஒரு தொகுதியினருக்கு வேறு நிலங்கள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இம் முகாமில் வசிக்கும் 155 குடும்பங்கள் குடியேற்றப்படாது கைவிடப்பட்டவர்களாகவும் எந்தவிதமான வசதிகளும் அற்றவர்களாகவும் நாளாந்த கூலி வேலையில் புழைப்பு நடத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு வேறு இடங்களில் சென்று குடியேறுவதற்கு எந்தவிதமான காணிகளும் அற்றவர்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
இது தொடர்பில் அந்தோனி கித்துரி அம்மா கூறுகையில், நான் கண்டில இருந்து இந்த முகாமுக்க வந்து 17 வருசம் ஆச்சு. எனக்கு மனுசனும் இல்ல. புள்ளங்களும் இல்ல. இந்த ஏலாத வயசிலையும் ஏதோ அவங்க இவங்கட்ட வாங்கித் தான் சாப்பிறன். கொட்டில் சயிற்றில தரபாலால மறைச்சு தான் என்ர வீடு இருக்கு. ஒரே ஒழுக்கு. மழைக்கே வருதம் வேற. எங்கள இந்த அரசாங்க அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை என அழுதார்.
இங்கு உள்ள மக்கள் கூலி வேலை செய்து தான் தமது குடும்ப சீவியத்தை மேற் கொள்கிறார்கள். இதேநேரம் வயது போனவர்கள் கூலி வேலைக்கு கூட போக முடியாது தனிமையில் இருந்து வாடுகிறார்கள்.
இந்த முகாமில் உள்ள 155 குடும்பங்களுக்கும் என தற்போது ஒரே ஒரு மலசலகூடம் தான் இருக்கிறது. அதுவும் கதவு எதுவும் அற்றதாகவுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுவதுடன் துஸ்பிரயோகங்கள் இடம்பெறவும் வழிவகுகின்றது. இது தவிர, முகாம் இருக்கும் போது வழங்கப்பட்ட மின்சாரம் தற்போது துண்டிக்கப்பட்டு விட்டது. அவர்கள் தற்போது மின்சாரம் பெற முடியாதுள்ளது. பழைய மின்சார இணைப்புக்களை பயன்படுத்துபவர்களை கள்ள கறண்ட் எடுத்ததாக குற்றம் சாட்டி மின்சாரசபை கேஸ் போடுது. சாப்பிடவே கஸ்ரப் பர்றம். பிறகு எப்படி கோட்ஸ்சில பைன் கட்ட முடியம். அப்ப இந்த அரசாங்கம் எங்களுக்கு இவ்வளவு நாளும் கள்ள கறண்ட்டா தந்தது என்கின்றார் எஸ். திரிபுரவாணி.
இங்கு மின்சாரவசதி இல்லாமையால் பிள்ளைகள் கூட படிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பி.நாகேஸ்வரி கூறுகையில், நான் கலியாணம் செய்து எனக்கு இப்ப இரண்டு பிள்ளைகள். இஞ்சத்த சுகாதார பிரச்சனையால என்ர ஒரு வயசு பிள்ளைக்கு வருதம். நான் ஆஸ்திரிக்கு திரியிறதே வேலையாப் போச்சு. அதுவும் மகாம் என்றதும் ஆஸ்பத்திரியில நக்கல பார்கிறார்கள். பேசுகிறார்கள் என்கிறார்.
பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கச் செல்கின்ற போது பூந்தோட்டம் முகாமில இருக்கிறம் என்றதும் பாடசாலையில் சேர்கிறார்கள் இல்லை. அப்ப எமது பிள்ளைகள் படிக்க முடியாதா என்கின்றார் மூன்று பிள்ளைகளின் தந்தையான வி.மகேந்திரன்.
இப் பகுதியில் மலசலகூட வசதி, மின்சாரப்பிரச்சனை, தண்ணிப் பிரச்சனை, சுகாதார வசதி என்பன இல்லாததுடன் முகாம் என்ற காரணத்தால் பிள்ளைகளையும் பாடசாலையில் இணைக்க முடியவில்லை. இதனால் இங்கு வாழும் சிறுவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக சிறுவர் அமைப்புக்கள் கூட கவனம் செலுத்தாது வேதனையளிக்கிறது என்கின்றனர் மக்கள். ஒன்று நடக்க முதல்ட தடுக்க வேண்டும். நடந்த பின்பு அறிக்கை விடுவதால் என்ன பயன் என்பதை அவர்கள் பரிய வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இங்கு வாழும் ரவிச்சந்திரன் அஜந்தன் என்பவர் கூறுகையில், நான் இங்க 2 வயசில வந்தனான். இப்ப எனக்கு 22 வயசு. மழை காலம் தொடங்கீற்று. கொட்டில் எல்லாம் ஒழுகுது. இருக்கவே முடியல. தென் பகுதியில காணிகளோட இருக்கிறவங்க கூட்டிக் கொண்டந்து இஞ்ச காணி குடுத்து இருத்திறாங்க. ஆனா எமக்கு இருக்க ஒரு துண்டு நிலமும் இல்ல. எங்களுக்கு காணி தந்த நாங்க புல்லையும் ஆயுதம் ஆக்கி உழைச்சு வாழுவம். நாங்க காசு கேட்கல. வசதி வாய்ப்பு கேட்கல. ஒரு துண்டு நிலம் தான் கேட்கிறம். நாங்களும் மனுசர் என்று ஏன் யோசிங்கிறார்கள் இல்ல. குறவர்களை விட கேவலமாக நாங்க இன்றைக்கு இருக்கிறம் என்றார்.
இப் பகுதி மக்கள் தமது பிரச்சனைகள் தொடர்பாக கிராம அலுவலர், பிரதேச செயலாளர், அரச அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை என்பவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் யாரும் இது வரை கண்டு கொள்ளவில்லை என இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் காணிகள் அற்று எந்தவித அடிப்படைவசதிகளும் அற்ற முகாமுக்குள் முடங்கி வாழும் இம் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மனிதர்களாக வாழ வழியை ஏற்படுத்திக் கொடுப்பார்களா என்பதே அனைவரதும் எதிர்பார்பாகும்.



















