காணாமல் போனோரின் உறவினர் கொழும்பில் நடைபெறுகின்ற காணாமல் போனோர் தொடர்பிலான புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்கவிடாது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு செல்ல முற்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனோர் தொடர்பிலான புகைப்படக் கண்காட்சி ஒன்று கொழும்பில் நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்ற நூற்று ஐம்பது இற்கும் மேற்பட்ட மக்களை கடந்த புதன்கிழமை அனுராதபுரம், மதவாச்சிப் பகுதியில் பொலிஸார் இடைமறித்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று பின்னர் திருப்பி அனுப்பினர்.
அதேபோல மன்னார் மாவட்டத்திலிருந்து இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மக்கள் கட்டையடம்பன் பகுதியில் இடைமறிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஒரே நாடு ஒரே மக்கள் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றமை சுயலாப நோக்கம் கொண்டதே தவிர உண்மையானது அல்ல என்பதையே இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. மக்களை கொழும்பு நோக்கிப் பயணிக்கவிடாது தடுத்தமை மக்களின் போக்குவரத்து உரிமையினை மீறும் செயலாகும்.
இதே போன்று கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியிருந்த இரண்டு ஆர்ப்பாட்டங்களுக்குச் செல்ல முற்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் தடுத்துநிறுத்தப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டிருந்தது. மனித உரிமைகள் ஆணைக்குழு இரண்டு முறை விடுத்த விசாரணைக்கான அழைப்புக்களையும் வவுனியாப் பொலிஸார் பொருட்படுத்தவில்லை.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் நாட்டில் முழுமையான சமாதானமும் ஜனநாயகமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மேடைக்கு மேடை அரச தரப்பு பொய்ப்பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. காணாமல் போனவர்களைத் தொலைத்துவிட்டு அவர்களின் உறவினர்களும் பெற்றோரும் கண்ணீருடனேயே தமது வாழ்க்கையை கழித்துவருகின்றனர். அந்த மக்கள் தமக்கு நீதி கேட்டு குரல் கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் சம்பவம் மிக மோசமான கண்டனத்துக்கு உரியது. இந்தச் சம்பவத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















