போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. அவர்களை மீளக்குடியமர்த்துவதில் என்ன தடை இருக்கின்றது? இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனும் நான் கலந்துரையாடவுள்ளேன் – என்று கேள்வியெழுப்பினார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்.
யாழ். மாவட்டத்துக்கு நேற்றையதினம் வருகை தந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு இடம்பெயர்ந்த மக்களை அவர் சந்தித்தார். அந்த மக்கள் கண்ணீர் மல்க, தமது வாழிடங்கள் இராணுவப் பிடிக்குள் சிக்குண்டு இருப்பதையும் தாங்கள் 23 வருடங்களாக இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி நிலையத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.
இதன்பின்னர் பிரிட்டன் பிரதமர் நலன்புரி நிலையத்திலுள்ள சில வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார். போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் இந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் ஏன் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்று கேள்வி அவர் எழுப்பினார்.
இதன்போது யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதற்குப் பிரதமர் கமரூன் எப்போது மீள்குடியமர்த்தப் போகின்றீர்கள்என்று பதில் கேள்வி எழுப்பினார்.
அதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், குறித்த காணிகளை இராணுவம் சுவீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் விடயத்தை வெளிப்படுத்தினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சடன் தான் கலந்துரையாடுவேன் என கமரூன் தெரிவித்தார்.
பிசுபிசுத்த போராட்டம்
கமரூன் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சீருடையினரால் ஏற்றிவரப்பட்ட சிலர் போராட்டம் ஒன்றை நடத்த முயன்றனர்.
இவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய பதாகைகள் தாங்கிப் பிடித்திருந்தனர். எனினும் இவை எதையுமே பொருட்படுத்தாமல் கமரூன் பயணித்தார்.
















