கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மன்னித்து மறப்போம் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செனல்4 ஊடகவியலளார் ஜோன் ஸ்னோவிற்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பழையவற்றை தோண்டி எடுப்பதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதி;ல்லை எனவும், எதிரிகள் அதிகரிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் என்பது இரண்டு தரப்புக்களுக்கு இடையில் நடைபெற்றது எனவும், யுத்தத்தில் என்னவும் நேர்ந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது என்ன நடந்தது என்ற கேள்விக்கு எவராலும் பதிலளிக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டேவிட் கமரூன் இதற்கு முன்னர் இலங்கைக்கோ யாழ்ப்பாணத்திற்கோ செல்லவில்லை எனவும், பிறநபர்களின் கோரிக்கைக்கு இணங்கவே பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருபது – முப்பது தாய்மார் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகவிடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மக்களும் பிழையாக வழி நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், உண்மையைக் கண்டறிவது அவ்வளவு சுலபமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தைப் பற்றி கவலை கொள்வதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1977ம் ஆண்டு கலவரத்தின் போது தமிழர் என்ற ரீதியில் தாமும் பாதிப்புக்களை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார். கலவரத்தில் தமது வீடு எரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலம் பற்றி சிந்திக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வதே உசிதமானது என அவர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழர்களின் உணர்வுகளுக்கு முரளீதரன் மதிப்பளிக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.வி. சென்னன் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்த கால குற்றச் செயல்களை இலங்கை அரசாங்கமே முற்று முழுதாக நிராகரிக்காத நிலையில் முரளீதரன், குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என தெரிவிப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
















