சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா வழங்கவுள்ள இரண்டு ரோந்துப் படகுகளில் எத்தகைய ஆயுதங்களைப் பொருத்தலாம், எத்தகைய தேவைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம் என்பன போன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் கடல் வழியாகத் தப்பிச் சென்ற பொதுமக்களை சிறிலங்கா கடற்படை, தாக்கி கொன்றதாக, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐ.நா நிபுணர் குழு அறிக்கையிலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறிலங்கா கடற்படைக்கு அவுஸ்ரேலியா, இரண்டு பே ரகப் படகுகளை வழங்கவுள்ளது அங்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. மனிதாபிமான, தேடுதல், மற்றும் மீட்பு பணிகளுக்காகவே இவற்றை வழங்குவதாக அவுஸ்ரேலிய பிரதமர் ரொனி அபோட் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தப் படகுகளை எத்தகைய தேவைகளுக்கு சிறிலங்கா கடற்படை பயன்படுத்தலாம் என்றோ, எத்தகைய ஆயுதங்களை பொருத்தலாம் என்றோ அவுஸ்ரேலியா கட்டுப்பாடு விதிக்கவில்லை.
இதுகுறித்து அவுஸ்ரேலிய ஊடகங்களும், கிறீன் கட்சியும், மனிதஉரிமை ஆர்வலர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். அவுஸ்ரேலியா வழங்கவுள்ள பே ரக ரோந்துப் படகுகளில், 7.62 மி.மீ இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அகற்றப்பட்ட பின்னரே சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படும்.
எனினும் சிறிலங்கா கடற்படை அந்த இடத்தில் வேறு ஆயுதங்களை பொருத்தலாம் என்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
















