திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பழ.நெடுமாறனை சந்திக்க சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் 1½ மணி நேரம் சிறை வாசலில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியான பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாக கூறி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் இடித்து அகற்றினர்.
அதிகாரிகளின் நடவடிக்கையை தடுக்க முயன்ற தமிழர் தேசிய இயக்கம் கட்சி தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் சத்தியமூர்த்தி, நல்லதுரை உள்பட 83 பேரை பொலிசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பழ.நெடுமாறனை சந்தித்து பேசுவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செவ்வாய்க்கிழமை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு சென்றார். விதிமுறைப்படி செவ்வாய்க்கிழமை அன்று, விசாரணை கைதிகள் யாரையும் வெளி ஆட்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறி அனுமதி மறுத்தனர்.
சிறப்பு அனுமதி பெறுவதற்காக வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது. சீமான் கொண்டு சென்ற பழங்களும் உள்ளே கொடுக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிறை வாசலில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த சீமான் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
















