மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கத்தின் அடிப்டையில் உருவாக்கப்பட்ட இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பி.பி.ஸி.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு மாகாண சபையை இயங்கவிடாமல் செய்வதற்கு, சபை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளே முட்டுக்கட்டை போடுகின்றனர்.
வடமாகாண ஆளுநராக உள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜி.ஏ. சந்திரசிறி நீக்கப்பட்டு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரசிங்கவிடம் கலந்துரையாடல் ஒன்றில் கோரியிருந்தோம். அவர் ஜனாதிபதியிடம் பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னையும் ஒரு இணைத்தலைவராக நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய ஒன்று. இந்த நிலையில், மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது – என்றார்.
















