யுத்த கால சேதங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் கணக்கெடுப்பு குறித்து சந்தேகம்?

question-markயுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மற்றும் இந்து அமைப்புக்களினால் இவ்வாறு சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் யுத்தம் காரணமாக நாட்டில் இடம்பெற்ற உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், பிரச்சினைகளுக்கு மெய்யான தீர்வு வழங்கப்பட மாட்டாது எனவும் கத்தோலிக்க மற்றும் இந்து செயற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

தகவல்களை திரட்டுவதற்காக 16000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்களும் சர்வதேச சமூகமும் பிரயோகித்த அழுத்தங்கள் காரணமாகவே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படும் கணக்கெடுப்பு வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், இந்தக் கணக்கெடுப்பின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக முன்னாள் கரிட்டாஸ் அமைப்பின் தலைவரும், மதகுருமான வணக்கத்திற்குரிய ஒஸ்வல்ட் பிரித் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான புள்ளி விபரத் திணைக்களமும், பொதுநிர்வாக அமைச்சினாலும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசாங்கமும் தனக்கு தானே பாதக விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இன்றும் கொலைகள் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக அருட்தந்தை டெரன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பு மூலம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு ஆணைக்குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எந்தவொருவரும் உயிரிழக்கவில்லை என ஜனாதிபதி அறிவித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 5000 முதல் 10000 வரையிலான பொதுமக்களே யுத்த சூன்ய வலயத்தில் சிக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார் எனவும், யுத்த நிறைவின் பின்னர் 300,000 பொதுமக்கள் யுத்த சூன்ய வலயத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சென்றிருந்தாகவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply