இறுதிவரை பொலிஸார் நேர்மையுடன் இருக்கட்டும்

shooting-gunயாழ். குடாநாட்டில் சட்டத்துக்குப் புறம்பாக – கள்ளமாக – ஆயுதங்கள் இருக்கின்றன என்பதும், அவை சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவரின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் 9 எம்.எம். பிஸ்ரலைப் பொலிஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்தக் கொலையில் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (மத்திய அரசைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சி) சார்பில் உள்ளவருமான கந்தசாமி கமலேந்திரன், கொலையுண்ட பிரதேச சபைத் தலைவரின் மனைவி அனித்தா உட்பட மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

போர்க் காலத்தில் ஈ.பி.டி.பி. ஆயுதக் குழுவாக இயங்கி வந்தது. தமது சொந்தப் பாதுகாப்புக்குத் தான் ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈ.பி.டி.பியினர் கூறிவந்தாலும், இராணுவத்தினருடன் தாங்கள் சேர்ந்து இயங்கியது உண்மைதான் என்று அண்மையில்கூட “டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போர் முடிந்ததும் ஆயுதங்கள் அனைத்தும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்று ஈ.பி.டி.பியும், ஆயுதங்கள்களையப்பட்டு விட்டன என்று அரசும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தெரிவித்து வந்தன. எனினும் துணைப் படைகளிடம் இருந்து ஆயுதங்களைக்களையவேண்டும் என்று அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் தமது அறிக்கைகளில் வலியுறுத்தி வந்தன. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவும் தனது பரிந்துரையில் ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

அரசோ தொடர்ந்தும் ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயதங்கள் அனைத்தும் களையப்பட்டு விட்டன என்று கூறிவந்தது. இப்போதோ, சாக்குக்குள் இருந்து வெளிப்பட்டுவிட்ட பூனையைப் போன்று ஈ.பி.டி.பியினர் வசம் சட்டவிரோத ஆயுதங்கள் இருந்தன என்பதை பொலிஸாரே நிரூபித்துள்ளனர். இதற்கு முன்னர் ஒக்ரோபர் மாதத்தி லும் ஒரு தடவை ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் பிஸ்ரலுடன் யாழ். நகரில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போதும் கமல் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் மேலதிக சோதனைகள் ஏதும் நடத்தப்படவில்லை.

பொலிஸார் மற்றும் சட்டம் ஒழுங்கைக் காக்கும் அதிகாரிகள் அசமந்தமாக இல்லாமல் அப்போதே, அரசியல் அழுத்தங்களைப் புறந்தள்ளி விட்டு நேர்மையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒருவேளை றெக்­யனின் உயிர்காக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே பொலிஸார் இனியும் தாமதிக்காமல் ஆயுதக் குழுக்களிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்களைக்களையும் நடவடிக்கைகளை, சோதனைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

அதேசமயம், இந்த வழக்கின் சாட்சிகளையும், விசாரணைக்குத் துணைபுரியும் அதிகாரிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பொலிஸாருக்கு இருக்கின்றன. இதுவரைக்கும் நேர்மையுடன் செயற்பட்ட பொலிஸ் இறுதி வரைக்கும் நேர்மையுடன் செயற்படவேண்டும்.

Tags: ,

Leave a Reply