மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்ரேலியா நுழைவுவிசா நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் மறுத்துள்ளது.
சிட்னியில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்கு, அவுஸ்ரேலியா செல்ல நுழைவிசைவு கோரியிருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் விண்ணப்பம், அவுஸ்ரேலிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, அவுஸ்ரேலியத் தூதரக பேச்சாளரிடம் விளக்கம் கோரிய போது, எந்தவொரு நுழைவிசைவு விவகாரம் தொடர்பாகவும், கருத்து வெளியிடுவதற்கு சட்டரீதியான தடை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அவுஸ்ரேலியாவின் இந்த முடிவு தனக்கு கடந்த வியாழக்கிழமை தெரியப்படுத்தப்பட்டதாக, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
“உலகின் ஏனைய பகுதிகளிலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவங்களின் கட்டளை அதிகாரிகளும் கூட இதுபோன்ற அவமானங்களைச் சந்தித்துள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டுகள் வரையறைக்குட்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றனர். எனக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டது தனியானதொரு விடயமல்ல.
ஒரு முறையான இராணுவத்தால், இலக்கு வைக்கப்பட்ட தீவிரவாதத்துக்கு உலகின் பல பாகங்களிலும் புகலிடம் கொடுக்கப்படுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு நுழைவிசைவு வழங்க முடியாது என்று அவுஸ்ரேலிய தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், 58வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உள்ளிட்ட பல சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு, வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















