இந்தநாட்டின் தலைவர், தேசத்தின் பெருமைமிக்க தந்தை என தன்னை கூறிக்கொண்டாலும் அவரது கிராமான மெதமுலன கிராமத்தின் பிள்ளைகளும் இன்று பட்டினியால் வாடுகின்றனர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
காலி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிசயமான அபிவிருத்தி என்ற புனைக் கதைகளை கூறி மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வருகின்றனர். நாட்டின் தலைவர் நாட்டை அழித்து வருகிறார். தரகு பணம் பெறுகின்றார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்றுக் கூறினாலும் அவர், நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களை போல் மக்களை இப்படி பழி தீர்க்கவில்லை.
நாட்டின் பிள்ளைகளையும் அழித்து விடக் கூடிய தலைவரே நாட்டின் தலைவராக இருக்கின்றார்.
குடும்ப உறவினர்களை தன்னுடன் இணைத்து கொண்டு, பாலியல் குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பற்றி ஆட்சியாளர்கள் சகல குற்றங்களையும் செய்து வருகின்றனர். நாட்டை அழிக்க வேண்டாம் என்று இவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டு மக்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு வாழ சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். நாட்டு மக்கள் தொகையில் 98 வீதமானவர்கள் திருப்தியாக உண்டு வாழ முடியாது வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டில் கொத்தமல்லி, சீனி முதல் சகல உணவுப் பொருட்களுக்கும் வரி அறவிடப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனை செய்யாமல் நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியாது என்றார்.
















