மனித உரிமை தினமான இன்று உறவுகளைத் தேடிப் போராட்டம்; வடக்கில் நடத்துவதற்கு ஏற்பாடு

humanrightsசர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு, கிழக்கில் கவனவீர்ப்புப் போராட்டமும், கவனவீர்ப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளன. காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரில் கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமற்போனோர் தொடர்பான விடயங்களை வலியுறுத்தியும், அவர்களுக்கு நீதி கோரியும் ஜனநாயக ரீதியில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

திருகோணமலை நகர மத்திய பஸ்நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகும் என்றும், இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும், காணாமற்போனோரின் உறவுகளும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கவனவீர்ப்பு
இதேவேளை, வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தக் கோரியும், இலங்கைத் தீவில் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் வவுனியாவில் இன்று கவனவீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்தக் கவனவீர்ப்பு நிகழ்வு ஆரம்பமாகும். இந்த நிகழ்வின் இறுதியில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

Tags: ,

Leave a Reply