யுத்தத்தின் பின்னரும் காணாமல் போதல்கள் தொடர்கின்றன: சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றச்சாட்டு

Suresh-Premachandran3யுத்தத்தின் பின்னரும் காணாமல் போதல்கள் தொடர்கின்றன. மக்களுடைய உரிமைகளை இந்த அரசாங்கம் மதிக்காது அடக்கி ஒடுக்கி வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் தினத்தில் உரையாற்றும் பேதே இதனைத் தெரிவித்தார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் இந்த மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது நாம் கொண்டாடுவதற்குரிய தினம் இல்லை. மனிதனை மனிதனாக மதித்து மனிதப் பண்புகளை பேணி இனம், மதம், மொழி என்பவற்றுக்கு அப்பால் நாங்கள் எல்லோரும் மனிதர்கள். ஒவ்வொரு மனிதர்களும் அடிப்படை உரிமைகள் உண்டு. அவர்கள் விரும்பிய கோவிலுக்குப் போவதற்கும் விரும்பிய கடவுளை கும்புடுவதற்கும் விரும்பிய மொழியை பேசுவதற்கும் விரும்பிய சுதந்திரக் கருத்துக்களை கொண்டிருப்பதற்கும் மக்களுக்கிடையில் ஒரு சமவுரிமையை பெற்றுக் கொள்வதற்கும் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அவர்கள் வாழ்வதற்கும் எல்லோரும் சமத்துவமாக இருப்பதற்கும் ஒவ்வொரு மனிதனும் கௌரவமாக நடத்தப்ப்ட வேண்டும் என்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் சட்டம், ஒழுங்கு அடிப்படையில் ஒவ்வொரு மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் இருக்கின்றன.

இவ்வாறான உரிமைகள் எமக்கும் இருக்கின்றன. அவற்றை பின்பற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும், எமது உரிமைகளை பயன்படுத்துவதற்கும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் நீதியாகவும் அதனை பயன்படுத்துவதற்கும் எமக்கு உரிமை உண்டு. அதனை கொண்ட சமூகமாகவே நாம் வாழ்கின்றோம். ஆனால் இலங்கையைப் பொறுத்த வரை தமிழ் மக்கள் அதாவது தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் இன்னும் ஒரு மொழி பேசுகின்ற அல்லது சிங்கள மொழி பேசுகின்ற மக்களால் அடக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டோம். எல்லா இடங்களிலும் பௌத்த கோவில்கள் வருகின்றது. நாங்கள் பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டுமாக இருந்தால் தமிழ் என்ற இனத்திற்காக பல நிர்பந்தங்களுக்கு உள்ளாகியுள்ளோம். நாம் வேலை வாய்ப்புக்களை பெறவேண்டுமாக இருந்தால் சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டோம். ஆகவே முழுமையாக நீங்கள் பார்த்தீர்களே ஆனால் எமது உரிமைகள் இன்னுமொரு இனத்தால் முற்று முழுதாக பறிக்கப்பட்டு அடக்கப்பட்டு நான் எனது மொழியை பேச முடியாதவனாக இந்த நாட்டில் யுத்தத்திற்கு கொண்டு சென்றது.

ஏன் யுத்தம் வந்தது. நான் நானாக இருக்க வேண்டும். நான் தமிழ் மொழி பேசுபவனாக இருக்க வேண்டும். நான் எனது இனத்தவனாகவே இருக்க வேண்டும். அது பாதுகாக்கப்பட வேண்டும். எமது கலை கலாசார பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தமது மொழி தொடர்பான ஒரு கர்வம் இருக்கும். தமது இனம் தொடர்பான ஒரு கர்வம் இருக்கும். தமிழ் மொழி என்பது மிக மிக பழைமையான ஒரு மொழி. உலகத்தில் சீன மொழி, கிரேக்க மொழிக்கு ஈடாக மிகப்பழமையான ஒரு மொழி. மிக இலக்கணச் சுற்றிவளைப்பு கொண்ட ஒரு மொழி. ஆகவே அது சார்ந்த பெருமை கொள்வதில் தவறு கிடையாது. அதனை நாங்கள் வளர்க்க முயல்வது தவறு கிடையாது.

அவற்றில் நாங்கள் படிக்க விரும்புவது தவறு கிடையாது. ஆனால் இவற்றை ஒரு அரசாங்கம் மறுக்கிறது. இவற்றை இல்லாது செய்கிறது. இந்த மொழி பேசப்படும் இடத்தில் வேறு மொழி பேசுபவர்களை கொண்டு சென்று குடியமர்த்தி அங்கு சொந்த மொழி பேசுகின்ற மக்கள் சிறுபான்மையாக்கப்படுகின்றார்கள். ஆகவே இவற்றுக்கு எதிராக ஒரு அகிம்சை வழியில் ஒரு சமாதானமான முறையில் ஒரு சாத்வீகமான முறையில், காந்திய வழியில் நாங்கள் போராட்டங்களை நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம். சத்தியாக் கிரகம் இருந்தோம். இப்படி பல போராட்டங்களை செய்தோம். ஆனால் அரசாங்கம் அதற்கு உடன்படவில்லை. இந்த நாட்டில் சிங்கள பௌத்தம் என்பது தான் முதன்மையானது. அரசியல் சாசனத்தில் கூட பௌத்தம் இந்த நாட்டின் மதம் எனக் கூறப்பட்டுள்ளது. சிங்களம் இந்த நாட்டின் அரசகரும மொழி என்று கூறப்பட்டுள்ளது. ஏன் இந்த நாட்டில் கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாமிய மதம் இருக்கின்றது. ஏன் அவர்கள் எல்லோரும் சமத்துவமாக இருக்கக் கூடாது. ஏன் என்றால் இந்த நாட்டு அரசியல் யாப்பு சொல்கிறது பௌத்தம் தான் அரச மதம். அது பேணி பாதுகாக்கப்படவேண்டும். ஆம். பேணி பாதுகாக்கப்படலாம். நீங்கள் பல செய்திகளை பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். எத்தனை கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டது. எத்தனை இந்து கோவில் தகர்க்கப்பட்டது. எத்தனை பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டது. ஏன் அவர்களும் ஒரு இனம் அல்லது மதம். எல்லோருமே பொதுவான ஒரு ஆண்டவரை நோக்கித் தான் பல்வேறு விதமாக வழிபடுகிறார்கள்.

ஆகவே அவர்களுக்கு அந்த சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் ஒரு பெரும்பான்மை மொழி பேசக் கூடிய ஒரு அரசாங்கத்தால் அவர்கள் தாங்கள் விரும்பியதை ஏனையவர்கள் மீது திணிப்பது மாத்திரமில்லை. அந்த திணிப்பின் ஊடாக அந்த மக்களது அடையாளத்தையே இல்லாமல் செய்வது. அந்த மக்கள் தாங்கள் தமிழன் என்ற தனித்துவத்தை இல்லாமல் செய்வது. இந்து, இஸ்லாம் என்ற தனித்துவத்தை இல்லாமல் செய்வது. இவையெல்லாம் அடக்குமுறையினுடைய உச்சக் கட்டம். இவற்றுக்கு எதிரானது தான் இன்றைய தினம். இந்த அடக்கு முறை எங்கே கொண்டு சென்று விடுகின்றது என்றால் ஒரு அநாவசியமானதொரு யுத்ததில் மக்கள் ஆயுதம் எடுத்து போராடுகின்ற நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. அதனுடைய வெளிப்பாடு என்ன? மிக மோசமான முறையில் மிகக் கண்மூடித் தனமான முறையில் எந்த விதத்திலும் போராட்டத்துடன் சம்பந்தம் இல்லாத சாதாரண மக்கள் கொல்லாப்பட்டுள்ளார்கள். இப்படி எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கை சொல்லுகிறார்கள். வடக்கு கிழக்கில் 70,000 பேர் கொல்லப்பட்டார்கள். 100,000 பேர் கொல்லப்பட்டார்கள் என மாறுப்பட்ட எண்ணிக்கையை சொல்லுகிறார்கள். ஆனால் ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் லட்சக்கணக்கானவர்கள் இந்த யுத்தத்தில் சம்மந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள்.

இவர்கள் ஏன் கொல்லப்படவேண்டும். இந்த அரசு தமிழர்களுக்கும் சமத்துவம் தருவதாக இருந்தால் இந்த அரசு சகலரையும் அவர்களது உரிமைகளுடன் நடத்தியிருக்குமாகவிருந்தால் இந்த யுத்தம் வந்திருக்கவேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் யுத்தத்தின் பலாபலன் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டது மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். உங்களுடைய பிள்ளைகள், கணவன்மார் உங்களது கண்ணுக்கு முன்னாலேயே காணாமல் போயிருக்கலாம். காணாமல் போனவர்களது பிள்ளைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம் என்பவற்றை யார் பார்பது இந்த அரசாங்கம் பார்க்குமா? இவ்வாறான மோசாமான அரசு சொல்லுகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று. ஆனால் இந்த அரசாங்கம் யுத்தத்திற்கு பிற்பாடு என்ன செய்கிறது. அவர்கள் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தை போல் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். யுத்தம் முடிந்த பின்பும் கூட காணாமல் போகிறார்கள்.

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறது. பொலிஸ் துறை என்ற ஒன்றும் இருக்கிறது. ஒருவர் குற்றம் செய்தால் அந்த சட்டத்தின் பிரகாரம் அவர்கள் கைது செய்யப்படலாம். விசாரிக்க முடியும். ஆனால் சட்டம், ஒழுங்கு, சாமாதனம் என்பன சரியாக பின்பற்றப்படவில்லை. அதை காணமுடியவில்லை. அப்படியான மோசமான நாட்டில தான் நாங்கள் இருக்கின்றோம். பல தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டது. அவை எல்லாம் எங்கே. யுத்தம் முடிவடைந்த பின் கூட மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமர முடியாதவாறு இராணுவம் நிலங்களை அபகரித்துள்ளது. முத்தையன் கட்டுப் பிரதேசத்தில் மக்களுடைய 2000 மாடுகளை இராணுவம் வைத்து பால் கறந்து தாம் பயன்படுத்துவதுடன் மேலதிகமான பாலினை விற்பனை செய்து வருகின்றது. சாதாரண மக்களினுடைய அந்த பொருளாதார உரிமைகளைக் கூட பறிக்கின்ற சூழல் தான் உள்ளது. இவையெல்லாம் மனித உரிமைகளுடன் சம்மந்தப்பட்டது. மிக மோசாமான யுத்த குற்றாச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ள மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ள நாடாக இந்த அரசாங்கத்மதின் மீதும் இந்த நாட்டின் மீதும் உலகம் பார்கின்றது.

ஒரு சர்வதேச விசாரணை தேவை என்ற சூழலுக்கு உலகம் போயிருக்கின்றது. இன்றும் கூட காணாமல் போனவர்கள் தொடர்பாக நாங்கள் பேசுகின்ற போது எமது கண்ணுக்கு முன்னால் காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். ஆனால் அரசாங்கம் அதற்கான பதிலை சொல்லாமல் இருக்கிறது. அவர்கள் கண்காணாத இடத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அரசாங்கம் அதனை மறுத்துரைக்கிறது. எமது கண்ணுக்கு முன்னால் கொண்டு போனவர்களையே நாங்கள் கொண்டு போகவில்லை என்று இராணுவம் கூறுகின்றது. இவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. உங்களுடைய போராட்டம் தான் இன்று இந்த அரசை ஒரு சர்வதேச நெருக்கடிக்குள் கொண்டு வந்திருக்கிறது. சர்வதேச ரீதியில் இந்த அரசாங்கம் விசாரணைக்கு வரவேண்டும் என்று உங்கள் போராட்டம் தான் அழைத்திருக்கிறது. ஆனால் நாங்கள் ஊமைகளாக இருந்தால் எதுவும் நடக்காது. ஆகவே இன்றைய சூழ் நிலையில் சிறுபான்மை மக்களை இந்த அரசாங்கம் மிக மோசமாக அடக்கி ஒடுக்குகின்றது. அவர்களுடைய சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. ஒரு பிள்ளை இறந்து போனால் அதற்காக ஒரு துளி கண்ணீரை விடுவதற்கும் தீபத்தை ஏற்றுவதற்கும் கூட இந்த இரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை. அவ்வளவு தூரம் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றது. ஆகவே எமக்கு என்ன சுதந்திரம் இங்கு இருக்கிறது. எனவே நாங்கள் இவற்றுக்கு எதிராக போராட வேண்டுமா இல்லையா? எமது போராட்டத்தை அடக்க அரசாங்கம் முயல்கிறது. இந்த அடக்குமுறை அரசாங்கத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எழுத முடியாமல் உள்ளார்கள். அவ்வாறு எழுதினால் நான்காம் மாடிக்கு அழைக்கப்படுகிறார்கள். எனவே இப்படியான மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றில் இருந்து எமது உரிமைகளை மீட்க நாம் தொடர்ந்து போராடவேண்டியவர்களாகவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply