யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என்ற ஒரு கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அக்கறையோடு செயற்படுகின்றார் என்பதும் உண்மைதான். அவற்றை நாம் மறுக்கவில்லை. அவர் மாகாணசபைத் தேர்தலின்போது கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி கிளையின் சார்பில் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் பிரபாகரன் பற்றி பாராட்டிப் பேசியிருக்கின்றார். புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் போராளிகள் என வலியுறுத்தியிருக்கின்றார். இவை எல்லாம் வரவேற்கப்படவேண்டிய விடயங்களே.
ஆனால் அவரது நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிர் மாறாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை நடந்துகொள்கின்றது. இவரது கிளிநொச்சி தீர்மானங்களில் ஒன்றைக் கூட கூட்டமைப்பின் தலைமை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கவில்லை. மாவீரர் தினம் தொடர்பான இவரது பாராளுமன்ற உரையினை சம்பந்தனும், சுமந்திரனும் கண்டித்திருக்கின்றனர். இவ் உரைக்கும் கூட்டமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் சிறிதரன் தமிழ்த்தேசியத்துடன் உறுதியாக நிற்பவராக இருந்தால் கட்சி தலைமைக்கு எதிராக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். அப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருத்தல் வேண்டும். போராட்டத்தில் வெற்றி காணவில்லையாயின் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த்தேசியத்திற்காக செயற்படுபவர்களுடன் இணைந்திருக்கவேண்டும்.
சிறிதரன் இவை எவற்றையும் செய்யவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக ஏனையவர்கள் போராடிய போது சிறிதரன் ஒதுங்கியே இருந்தார். ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் எடுக்கும் முடிவினை சம்பந்தன் எடுத்த போது மாவை கடுமையாக முரண்பட்டிருந்தார். அப்போது கூட சிறிதரன் மாவையுடன் இணைந்து எதிர்ப்பு காட்டுவதற்கு பதிலாக மௌனம் சாதித்திருந்தார்.
சிறிதரனின் இப்போக்கு அவர் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதையே வெளிக்காட்டுகின்றது. மக்களிடம் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக அவர் தமிழ்த்தேசியத்தில் உறுதியாக நிற்பதாக காட்டிக் கொள்கிறார். மறுபக்கத்தில் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக கூட்டமைப்பின் தலைமை செயற்படும் போது மௌனம் காத்து ஒத்துழைக்கின்றார். இது முழுக்கமுழுக்க பதவியை பாதுகாப்பதற்கான நடிப்பே தவிர வேறென்றும் அல்ல.
உண்மையில் இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் கூட்டமைப்பு தலைமையின் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இவர்கள் தான் வெள்ளைப்பூச்சடிக்கின்றனர். இதன் மூலம் கூட்டமைபினை திருத்துவதற்கு பதிலாக மேலும் கெட்டுப் போவதற்கு துணைபுரிகின்றனர்.
















