வடக்கு மாகாணசபைக்கு சிவில் ஆளுநர் வேண்டும்; அதில் தவறேதும் இல்லை என்கிறார் வாசு

vasudeva_nanayakkaraவடமாகாண ஆளுநரை நீக்கி அப்பதவிக்குச் சிவிலியன் ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கோரப்படுகிறதே தவிர, சிங்களவர் எவரையும் நியமிக்க வேண்டாம் எனக் கூறவில்லை. எனவே, அதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை.

எனவே, வட மாகாண சபையும் அரசும் பேச்சு நடத்தி இவற்றுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற காணி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைப் பிரதிநிதிகள் தமது சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும். இந்தியாவில் கிராம பஞ்சாயத்து போன்று பிரதேச சபை உறுப்பினர்கள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தே அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

நிதிக்குழுவினால்தான் மாகாண சபைக்கு நிதி வழங்கப்படும். வடமாகாண சபைக்கு அதனூடாகவே நிதி வழங்கப்படுகின்றது. எனவே, நிதி வழங்கப்படுவதில்லை எனக் கூறமுடியாது. வடமாகாண சபையும் அரசும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் அத்தியட்சகரை நியமிக்கும்போது மாகாண சபையுடன் கலந்துரையாடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் தவறொன்றும் இல்லை. மத்திய அரசும் வடமாகாண சபையும் பேச்சு நடத்தி இவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும் – என்றார்.

Tags: , ,

Leave a Reply