தமிழ் மக்களுடைய அறுபது ஆண்டுகாலப்பிரச்சினை சர்வதேச மட்டத்தில் ஒரு முக்கிய கட்டத்தினை எட்டியுள்ள போதிலும் அதனை சரியான வகையில் முன்னெடுத்துச்செல்லவேண்டிய கடப்பாடு தமிழ்த்தலைமைகளுக்கு உள்ள நிலையில் அந்தத்தலைமைகள் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் பலத்த விசனத்தினை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வருகின்றன.
இலட்சக்கணக்கான மக்களின் உயிர்விலைகளின் மீது தமிழினம் இன்று நின்றுகொண்டிருக்கிறது என்பதை புரிய மறுக்கும் தமிழ்த்தலைமைகள் தாயகத்தில் கட்சிக்கு ஆள்பிடிக்கும் நடவடிக்கையிலும் வாக்கு வங்கிகளை நிரப்பும் நடவடிக்கையிலும் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றன.
ஏட்டிக்குப்போட்டியாக கட்சி அலுவலகங்கள் திறப்பதும் தனித்தனியாக மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதும் அவற்றினை படங்களாக்கி ஊடகங்களில் வெளியிட்டு அரசியல் பிரபல்யம் தேடுவதிலுமே கட்சிகள் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றன.
ஈழவிடுதலைப்போராட்டம் எத்தனை ஆயிரம் தியாகங்களைக் கடந்தது. தமிழனத்தின் தலைவிதியே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது குரலை ஒரு சேர வெளிப்படுத்தவே கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமது ஜனநாயகக்குரலை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
ஆனால் மக்களை மடையர்களாக எண்ணி கூட்டமைப்பின் கூட்டுக்கட்சிகள் ஆளாளுக்கு மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்களின் பலமாக காட்டுவதற்காகவே தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரியிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சக்தியை உருவாக்குவதற்காக கடந்தகாலங்களில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மன்னித்தே கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டார்கள். ஆனாலும் போர் முடிந்த கையோடு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஒவ்வொன்றும் தாம் தாம் தமக்குத் தெரிந்தவகையில் தனியாக விழா எடுப்பதும் தமது பலத்தினை நிருபிக்கவும் முண்டியடிக்கிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் எம்பி சிறிதரன் தமிழரசுக்கட்சி நிகழ்வு ஒன்றில் ஆற்றிய உரை உண்மையான விடுதலையை நேசிக்கும் மக்களை கடுப்படைய வைத்திருக்கிறது.
தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் மாவீரர்களையும் தலைவர் பிரபாகரனையும் தமது அரசியலுக்காகப் பயன்படுத்திவரும் கூட்டமைப்பு எம்பிக்களின் இழிவான நடவடிக்கை மீண்டும் தொடங்கியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிதரன் எம்பி,
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தன்னை ஆத்மார்த்தமாக இன்றும் இயக்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அதனைவிடவும் தமிழரசுக்கட்சியை தலைவர் அவர்கள் தெரிவு செய்ததாலேயே தான் தமிழரசுக்கட்சியை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்
கூட்டமைப்பில் உள்ள மற்றக்கட்சிகள் தனித்தனியாக நிகழ்வுகளையும் மாநாடுகளையும் நடத்துவதையும் அவர் விமர்சித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளை மனமார நேசிக்கும் எவரும் ஏனைய கட்சிகள் நடத்தும் தியாகிகள் தினத்தையோ, வீரமக்கள் தினத்தையோ ஆதரிக்கப்போவதில்லை.
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஆத்மார்த்தமாக இயக்குவதாகச் சொல்லும் சிறீதரனுக்கு தேசியத் தலைவர் அவர்கள் துரோகி அமிர்தலிங்கத்துக்கு சிலை எடுப்பதற்கோ, அமிர்தலிங்கத்துக்கு நினைவு அஞ்சலிகளை நடத்துவதற்கோ, தமிழினத்துரோகி அமிர்தலிங்கத்துக்கு நினைவு நிகழ்வுகளில் பிரமாண்டப்படங்களை வைத்து மாலைபோடவோ சொன்னாரா?
எண்ணிப்பார்க்க முடியாத தியாகங்களை மேற்கொண்ட தேசியத்தலைவர் அவர்களையும் மாவீரர்களையும் கேவலமான கட்சி அரசியலுக்காக பயன்படுத்துவதை கூட்டமைப்பினர் எத்தனை காலத்துக்கு உபயோகிக்கப்போகிறார்கள்.
மாவீரர் துயிலும் இல்லங்களை சுத்தம் செய்யப்போகிறோம் என்று அறிவித்து உருப்படியான நடவடிக்கை எதனையும் செய்யாமலேயே, வெளியில் முகாம் இட்டிருந்த இராணுவத்தை துயிலும் இல்லங்களுக்குள் முகாம் அமைக்க வைத்ததும் இவர்கள்தான்.
ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றால் அதற்கு கூட அனைவரும் கூட்டமாக செல்வதில்லை. ஏதாவது ஒரு கட்சி ஆர்ப்பாட்டத்துக்கான ஒழுங்கமைப்புகளை செய்து விட்டு அறிவிப்பு விடுத்தால், ஏனைய கட்சிகள் அதில் தமது கட்சியின் உறுப்பினர்கள் பங்கெடுத்துவிடக்கூடாது என்பதில் அக்கறைகாட்டிச் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
கூட்டமைப்பினர் சரியான நிலைப்பாட்டில் இருந்தால் பிரதேசசபைகள், நகர சபைகள், மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்று திரட்டினாலேயே போராட்டங்களை முழுமையானவையாக காட்டமுடியும்.
ஆர்ப்பாட்டம் செய்கிறோம், போராட்டம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு சில பத்துப்பேர் சேர்ந்து படம் பிடித்து ஊடகங்களில் விளம்பரம் தேடுவது. சர்வதேசத்துக்கு வேறு விதமான கருத்துக்களையே சொல்லிவிடுகின்றன. அவை மக்கள் ஆதரவற்ற போராட்டங்களாகவே அமைவதாக பார்ப்பவர்கள் கருதக்கூடும்.
மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதால் ஆளுந்தரப்பின் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம் என்ற அச்ச நிலை காணப்பட்டால் அதனைத் தவிர்ப்பதற்காக கூட்டமைப்பின் உறுப்பினர்களைத்திரட்டுவதில் உள்ள தயக்கம் தான் என்ன?
ஒவ்வொரு கட்சியும் தனித்தனியான மாநாடுகளை நடத்துவதாகவும் இது ஆரோக்கியமானதல்ல என்றும் தமிழரசுக்கட்சி அலுவலகத் திறப்பு நிகழ்வில் சிறிதரன் உரையாற்றியிருந்தார். அப்படியாயின் தற்போது மாநாட்டிற்கு தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்திருப்பது ஏன்? எதனால்?
தமக்குள்ளேயே மோதிக்கொண்டு கதிரைகளுக்காக சண்டைபிடிக்கும் இவர்களின் குடுமிச்சண்டை என்று முடிவுக்கு வருகிறதோ அன்று தான் தமிழிழனத்துக்கு விடிவுக்கான சாத்தியம் தென்படும்.
– தாயகத்திலிருந்து தாஸன்
















