பயங்கரவாதிகளின் உலகளாவிய வலையமைப்பு வலுப்பெறுகிறது : கோத்தபாய ராஜபக்ஷ

Gotabaya5இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளெதுவும் காணப்படாத போதிலும் பயங்கரவாதிகளின் உலகளாவிய வலையமைப்பானது மிக அதிகளவில் திட்டங்களற்ற விதத்தில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் 14ஆவது பாதுகாப்பு சேவைகள் மற்றும் மாநாட்டில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ள ராஜபக் ஷ தமிழீழ விடுதலைப்புலிகள் வலையமைப்பானது ஜனநாயக முகமொன்றுடன் தற்போது இயங்கி வரும் முன்னணி அமைப்புகள் ஊடாக இலங்கைக்கு எதிரான சர்வதேச மட்டத்திலான பிரசார இயக்கமொன்றைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருகின்றதெனவும் சுட்டியுரைத்துள்ளார்.

சில நாடுகள் அரசியல் தீவிரத்தன்மைக்கும் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதில் உரிமை கொண்டாடி வருவதன் காரணமாக இத்தகைய முன்னணி அமைப்புக்களின் இவ்வாறான செயற்பாடுகளை அவை கண்டும் காணாதவை போலவே விட்டு விடுகின்றன. அதேநேரத்தில் பயிற்றுவிக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளுள் பலரை உள்ளடக்கிய குறித்த வலையமைப்பின் தேர்ச்சிமிக்கவர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன் இலங்கையின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு புத்துயிரளிப்பதற்கான வழிமுறைகளை அடிக்கடி தேடியும் வருகின்றரெனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச சார்பற்ற அமைப்புக்களின் உலகளாவிய வலையமைப்பொன்றின் நிலையான இருப்பின் மூலம் இறைமையுள்ள நாடுகளுக்கு விடுக்கப்பட்டு வரும் நேரடி அச்சுறுத்தலுக்கு மேலாக குறைந்தளவில் வெளிப்படையாக காணப்படும்

பாதுகாப்பு குறித்த எண்ணமிடல்களும் மனதிற்கொள்ளத்தக்கவையாகும். அரச சார்பற்ற அமைப்பொன்றின் வளங்கள் மாறுபட்ட நோக்கங்களுக்கென ஏனைய குழுக்களால் பாவிக்கப்படலாமென்ற சாத்திய நிலையை நாம் சர்வ சாதாரணமானதென எடுத்து விடலாகாது. மேலும் புத்தி சாமர்த்தியத்துடன் நிலைமையை சமாளிக்கும் ஆற்றல் கொண்ட இன்னொருவரின் உத்தியைக் கையாளக் கற்றுக்கொள்ளவும். அதனை விஞ்சவுமான பிரயத்தன மன ஆற்றலொன்றை அரச சார்பற்ற அமைப்புக்கள் காண்பித்துள்ளதாகவும் கோத்தாபய ராஜபக் ஷ எச்சரித்தார்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் கணிசமான எண்ணிக்கையினரான தமிழர்களின் மனங்களில் இனத்துவ உணர்வை ஊட்டி வளர்ப்பதன் மூலம் தனக்கான ஆதரவை திரட்டுவதே தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தின்போது கைக்கொண்டிருந்த யுத்த செயற்பாட்டு முறையின் பிரதான அங்கமாக விளங்கியதெனச் சுட்டிக்காட்டிய அவர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கென உலகளாவிய ரீதியில் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் முன்னணி அமைப்புக்களாலும் புலம்பெயர் மக்கள் கூட்டத்தினரிடையே தீவிரவாதம் குறித்த இயல்பான ஊக்கம் அளிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்.

கடந்த 1993 தொடக்கம் 2003 வரையிலான காலப்பகுதியிலுள்ள வருடாந்த அடிப்படையொன்றில் 50 தொடக்கம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களும் 2002 தொடக்கம் 2008 வரையிலான காலப்பகுதியில் ஆண்டொன்றுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் உதவு நிதியாக திரட்டியிருக்க வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் நடந்தேறியிருந்த சம்பவங்கள் பற்றி பொய்யான தகவல்களை வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் தாம் விரும்பிய பயனை அடைவதற்கேற்ற வகையில் கவனமாக மேற்கொள்ளப்பட்ட பிரசார உத்தியே நிதி சேகரிப்பு முயற்சிக்கான அடிப்படையாக அமைந்திருந்ததெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply