2012ம், 2013ம் ஆண்டுகளில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு விழா, வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் இன்று (01.07.2014 அன்று) நடைபெற்றது.
வித்தியாலயத்தின் முதல்வர் ப.கெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, வித்தியாலயத்துக்கான புதிய மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவு போரினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் மாணவர்கள் உட்பட வகைதொகையற்ற உயிர்களை யுத்தம் காவு கொண்டு விட்டது. பல உறவுகளின் உடல் அவயங்களையும் பறித்தெடுத்து விட்டது.
எங்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தனை துயரங்கள், இழப்புகளிலிருந்தும் விடுபட்டு, ஒரு புதிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் அதிபர்கள் ஆசிரியர்கள் அடங்கலான கல்விச்சமுகத்துக்கு பாரிய பொறுப்புண்டு.
இந்த பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறைகள், பௌதீக வளங்கள் பற்றாமை, ஆசிரியர் விடுதிகள் இல்லாமை, போக்குவரத்து பாதைகள் சீரின்மை, ஆசிரியர்களுக்கான வேதன ஊதியங்கள் அதிகரிக்கப்படாமை, போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் இன்மை என்று பல்வேறு குறைபாடுகள், இடர்நிலைமைகளுக்கு மத்தியிலும், அந்த பொறுப்பை நன்கு உணர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு, இப்பிரதேச அதிபர்கள் ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர்.
அதில் சின்னடம்பன் பாரதி வித்தியாலயமும் அடங்கும். இந்த வித்தியாலயத்தினுடைய கல்வி பரீட்சை பெறுபேறுகள் குறிப்பாக க.பொ.த.சாதாரணதரம் மற்றும் உயர் தரப்பெறுபெறுகளும், ஏனைய கலை கலாசார விளையாட்டு துறைகளின் அடைவு மட்டங்களும் மிகவும் சிறப்பாக இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைவதாகவும், சிறப்பாக அத்தேர்ச்சி அடைவு மட்டங்களை வெளிப்படுத்திய மாணவர்கள், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்து பாராட்டு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்திரராஜா, தியாகராஜா, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலர் ஆயகுலன், நெடுங்கேணி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் செல்வரட்ணம், ஜெயரூபன், இவர்களுடன் ஓய்வு பெற்ற வவுனியா வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.வியாகமூர்த்தி, வவுனியா வடக்கு உதவி கல்வி பணிப்பாளர் (தமிழ் வசதிப்படுத்துநர்) கோ.வாகீசன் ஆகியோரும், வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில்,
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான பரிசளிப்பும், இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நன்றி நவிலலும் கௌரவிப்பும், விருந்தினர் உரைகளும் இடம்பெற்றன.
முக்கிய கவனத்துக்கு:
வித்தியாலயத்துக்கென்று vsbvid.sch.lk இணையத்தளமும் வவுனியா வடக்கு வலய ஆசிரிய ஆலோசகர் சி.சிவராசாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. vsbvid.sch.lk இணையத்தளத்தை பார்வையிட்டு வித்தியாலயத்தின் வரலாறு, மற்றும் செயல்பாடுகள், அடைவு மட்டங்கள், சாதனைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
















