மன்னார் பிரதேசத்தில் புனர்வாளிக்கப்பட்டவர் சுட்டுப் படுகொலை செய்யப்’பட்டமை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி கோரியுள்ளது. இலங்கை முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். இந் நிலையிலேயே இக் கொலை இடம்பெற்றுள்ளது எனவும் குற்றச்சாட்டு.
இது தொடாடபில் தமிழ் தேசி மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பிரதேசத்திலுள்ள கணேசபுரம் என்ற கிராமத்தில் வசித்து வந்த முன்னர் தமிழீழ காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவரெனக் கூறப்படும் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) கடந்த புதன்கிழமை (12-11-2014) இரவு 8.00 மணியளவில் அவரது காணியில் வேலை செய்து கொண்டிருந்த போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப் படுகொலைச் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளது ஆளுகையின் கீழ் வன்னிப் பிரதேசம் இருந்த காலப்பகுதியில் அங்கு நடைமுறையிலிருந்த தமிழீழ காவல்துறை என்ற கட்டமைப்பில் அதிகாரியாகப் பணியாற்றிதாகக் கூறப்படும் நகுலேஸ்வரன் 2009 மே மாதத்தின் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா அரசினால் “புனர்வாழ்வு” அளிக்கப்பட்டதாகக் கூறி சமூகத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்.
புனர்வாழ்வு முகாமிலிருந்து விதலையான பின்னர் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தீவு முழுவதும் ஸ்ரீலங்கா அரசின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள நிலையில் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினரிடமும், பொலீசாரிடமும் மட்டுமே ஆயுதங்கள் காணப்படுகின்றன. அதிலும் வடமாகாணத்தில் சுமார் 15 இராணுவ டிவிசன்கள் நிலை கொண்டுள்ளதுடன், இப்பிரதேசம் உளவுத் துறையினரது அதி உச்ச கண்காணிப்பின் கீழும் உள்ளது.
அது மட்டுமன்றி “புனர்வாழ்வு” அளிக்கப்பட்டதாக கூறி சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அதிதீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.
இவ்வாறான புறச்சூழ்நிலையில் நகுலேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.
இக்கொலை தொடர்பாக ஸ்ரீலங்கா அரசு நியாயமான விசாரணைகள் எதனையும் நடாத்தும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனவே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொண்டு வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இக்கொலை தொடர்பாகவும் முழுமையான விசாரணை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம்.
















