நாட்டின் மூலச் சட்டத்தை மீறி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்போதைய தலைவர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பலருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத இயக்கத்தினருடன் ஜனாதிபதி எவ்வாறு ஒன்றாக நின்று படம் பிடிக்க முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமல்ல. அவர்களுடன் அரசியல் ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது என்பது தவறான கருத்தோ விடயமோ அல்ல. ஆகவே அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கப்படாத விடுதலை புலி தலைவர்களுடன் ஒன்றாக இணைந்து செயற்பட்டு ஏனையோரை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது.
நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருந்த போதும் அரசாங்கம் இவ்வாறே இனவாதம் பேசியது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ராஜகிரியவில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஐ.தே.க. வின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,
மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்கள் நெருங்கி விட்டன. அரசாங்கத்தின் புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் வடக்கில் கூட்டமைப்பின் பெரும்பான்மையான வெற்றி உறுதியாகியுள்ளதுடன் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ஆளும் கட்சி படுமோசமான தோல்வியை சந்திக்கப் போகின்றது.
இதனை திசை திருப்பிக் கொள்ள வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு எதிர்க்கட்சியினரை தாக்குகின்றனர். நுரைச்சோலையில் விக்கிரமபாகு கருணாரட்ன தாக்கப்பட்டார்.
இவ்வாறு மிகவும் மோசமான வன்முறைகளை எதிர்க்கட்சிகள் மீது கட்டவிழ்த்து விட்டு மோசமான தேர்தல் வெற்றியை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிக்கின்றது. நாள் கூலிக்கு ஆட்கள் ஜனாதிபதியின் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆகவே பொதுமக்கள் இந்த தேர்தலை அரசுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும்.
தன்னை சர்வாதிகாரியாக காட்டிக் கொள்ள விரும்பாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயகவாதியாக செயற்பட வேண்டும். அதாவது 17 ஆவது திருத்தச் சட்டத்தை 24 மணித்தியாலத்திற்குள் கொண்டு வரமுடியும். அதேபோன்று உறுதியளித்தது போன்று நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியும். இவற்றை செய்தால் ஓரளவேனும் ஜனநாயக வாதியாக தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாது தேசிய ரீதியில் 60 சதவீதத்தை குடும்ப நிர்வாகத்தின் கீழ் வைத்துக் கொள்வதும் ஊடகங்களை அடக்கி உரிமைகளை மீறுவதும் சர்வாதிகாரத்திற்கான வெளிப்பாடே தவிர ஜனநாயகம் அல்ல.
இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்தும் அவ்வாறானதொன்றே. ஆனால் அரசாங்கம் அதனை மூடி மறைக்க பெளத்த கொடியை காட்டி இனவாதத்தை தூண்டி விட்டது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. அவர்களுடன் அரசியல் தொடர்புகளை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிமை உள்ளது. இதில் தலையிட ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுங் கட்சிக்கு அதிகாரம் இல்லை.
ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையாக விசாரணை மேற்கொள்ளாது தற்போதைய புலிகளின் தலைவர் கே.பி.யுடன் அரசு எவ்வாறு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். அண்மையில் ஜனாதிபதியும் கே.பி.யுடன் ஒன்றாக நின்று படம் பிடித்தார். இதுநாட்டின் மூலச்சட்டத்திற்கு எதிரான விடயமாகும். இதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
















