நாட்டை குழப்புவதற்கு சர்வதேச சக்திகளுக்கு இடமளிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருட காலமாக நாட்டில் இருந்த யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்து கடினமான முறையில் வென்றெடுத்த சமாதானத்தைப் பாதுகாக்க மக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
அத்துடன் சமாதானத்தை வென்றெடுத்த நாட்டின் தலைவரை மக்கள் மதிக்கின்ற அதேவேளை, சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றனர்.எனினும் அரசுடன் மக்கள் இருக்கின்ற வரையும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு யாராலும் குந்தகம் ஏற்படுத்த முடியாது.
இருப்பினும் சர்வதேச தலையீடுகள் காரணமாக உலகின் பல நாடுகளில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையைத் தவிர உலகின் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கவில்லை.
ஆறு மாதத்திற்கு ஒரு தடவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் விவாதம் செய்யப்படுகின்றது. ஏன் உலகின் வேறு நாடுகளில் முக்கியமான பிரச்சினைகள் இடம்பெறவில்லையா?
மேலும் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போரினை வைத்து புலம்பெயர் தமிழர்களால் திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு அங்குள்ளவர்கள் தற்போது தங்களது இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளனர் என்றார்.
















