இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் போர்க்கால இழப்பீடுகள் தொடர்பான பதிவுகள் உண்மையான தகவல்களை வெளிக் கொண்டு வராது. இது அரசின் ஏமாற்றும் செயற்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கல்நாட்டியகுளம் முத்தமிழ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கல்நாட்டிய குளத்தில் பொழுது போக்கு மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் சர்வதேச ரீதியில் இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்காகவும் யுத்த கால இழப்பீடுகள் தொடர்பான பதிவுகளை இந்த அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது.
கடந்த காலயுத்தங்களில் பல குடும்பங்கள் முழுமையாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவுகள் இதில் உள்வாங்கப்படவில்லை. அதாவது யுத்தத்தில் இழப்பீடுகளை சந்தித்தவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கும் போது குடும்ப உறுப்பினர் ஒருவரே வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தனது பெற்றோர்களையும் சகோதரர்களையும் இழந்த ஒருவர் தற்போது திருமணமாகி இருந்தால் அவர் தனது பெற்றோர் தொடர்பாகவோ அல்லது சகோதரர்கள் தொடர்பாகவோ பதிகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவ்வாறான ஒருவர் திருமணமாகிய குடும்பம் தொடர்பாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருப்பதும் யுத்தப் பாதிப்புக்கள் தொடர்பாக எவ்வாறு முழுமையான தகவல்களை பெற முடியும் என்ற சந்தேகத்தையும், யுத்த இழப்பீடுகளை அரசு மறைக்க முயல்வதையும் சுட்டிக் காட்டுகிறது.
இதைவிட, எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக எமது உறவுகள் பல இடம்பெயர்ந்து இந்தியாவிலும் புலம் பெயர் நாடுகளிலும் வசித்து வரும் நிலையில் அவர்களது பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் உள்வாங்கப்படுவதற்கு எந்தவொரு வழிமுறைகளும் ஏற்படுத்தப்படவில்லை. யுத்ததத்தினால் இடம்பெயர்ந்த பல மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை. இராணுவத்தினரால் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் பல குடும்பங்கள் பிற மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் முறையாக யுத்த இழப்பீடுகளை பதிவு செய்வது தொடர்பிலும் சரியான முறை எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.
யுத்த இழப்பீடுகள் தொடர்பாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டியது அவசியானது தான். ஆனால் அது நேர்மையாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து சாவதேச அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கான வெறும் கண்துடைப்பாக அமையக் கூடாது எனவும் தெரிவித்தார்.
வவுனியா சிறிநாகராஜா வித்தியாலய உப அதிபர் எஸ்.தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பார்த்தீபன், வவுனியா சிறி நாகராஜ வித்தியாலய அதிபர் வரதராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






















