“மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அரசு நடத்தாவிடின், ஐ.நாவில் சிக்குவது உறுதி” என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தாம் ஆக்கிரமிப்புக்கு எதிரானவர் என வார்த்தைக்கு வார்த்தை கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், இவரது ஆட்சியிலேயே நாட்டில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன.
போரால் பாதிப்படைந்த மக்களின் நிலங்களை பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு செய்து இராணுவ முகாம்களை அரசு அமைத்துக் கொண்டு வருகின்றது. இவைதானா ஜனாதிபதி கூறும் ஜனநாயகம்? இதனால், தமிழர்களுக்கு தற்போதிருக்கும் நிம்மதியும் தொலைந்துவிட்டது.
இப்படி தமிழர்களின் நிம்மதியை அழித்த அரசு தற்போது 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பித்து நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நிம்மதியையும் கெடுத்துள்ளது. இது தனி ஒரு நபரின் சுயநலத்திற்காக தயார் செய்யப்பட்ட பட்ஜெட். இதனால், மக்கள் ஏமாற்றமடைந்தது மட்டுமே மிச்சமாகும்.
அதுமட்டுமல்ல, இந்த அரசே பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனை நாட்டுக்குள் அழைத்தது, யாழிற்கு பயண செய்ய அனுமதியளித்தது. அவர் அனைத்தையும் பார்வையிட்டு இலங்கையில் ஜனநாயகமே இல்லை என சர்வதேசத்தில் முறையிட்டுள்ளார்.
அத்தோடு, அடுத்த வருட மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையிலும் முறையிடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரின் இச்செயற்பாட்டிற்கு காரணம் இந்த அரசே.
போர்க்காலத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளக விசாரணையை பாரபட்சமின்றி நடத்தியிருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. அதைச் செய்யத் தவறிவிட்டு தற்போது எதிர்கட்சிகள் மீதும், எம்மீதும் வீண்பழி சுமத்துகிறது அரசு.
ஆனால், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தாவிடின் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் சிக்குவது உறுதி. சர்வதேச நாடுகளின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை அரசு உணர்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். என்றார்.
















